சுங்கை பூலோ , ஜன 27-

கல்வித் தாய் சரஸ்வதி தேவியின் அருளாசி வேண்டி எழுத்தறிவித்தல் சடங்கை பக்திகரமாக செய்து முடித்த சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர் பெருந்தகையினரை சுபாங் நாடாளுமன்ற தேசிய முன்னணியின் இந்தியர் நல இயக்குநர் அ.பிரகாஷ்ராவ் வெகுவாகப் பாராட்டினார்.

முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள 101 இந்திய மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்ட இந்த ‘எழுத்தறிவித்தல் விழா’, காணக் கிடைக்காத கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது என யூனிக் கழகத் தலைவருமான அவர் கூறினார்.

சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளியின் ஆசிரியையும் சமூக ஆர்வளருமான தமிழ்வாணி கருணாநிதியின் பெரு முயற்சியில் ஏழாவது ஆண்டாக இந்த ‘எழுத்தறிவித்தல் விழா’,  வெள்ளிக்கிழமை காலை வேளையில் பள்ளி மண்டபத்தில் பக்தி மணங்கமழத்தோடு நடைபெற்றது.

நெற்கதிர்கள் நிரம்பிய வெள்ளி தட்டில், உயிரெழுத்துக்களில் முதன்மயான ‘அ’ எனும் எழுத்தை மாணவர்கள் தங்களின் பெற்றோரின் உதவியோடு விரலால் எழுத, குருக்களால் வேத மந்திரங்கள் ஓதப்பட, ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் தங்கள் மாணவர்களின் கல்வி நலனுக்காக இறைவனிடம் வேண்டுகோள் வைத்திட, இந்த ‘எழுத்தறிவித்தல் விழா’ அனைவரிடத்திலும் புதிய உத்வேகத்தையும் தன்னம்பிக்கையையும் வரவழைத்தது.

இந்துக்களின் சமய நம்பிக்கைக்களில் போற்றத்தக்க இந்த விழா மீது ஈர்ப்பு கொண்ட பிரகாஷ்ராவ், ஏற்பாட்டாளர்களின் சிரமம் போக்க வெ.1,000 வழங்கி ஆதரவு தெரிவித்தார். மஇகா சுபாங் தொகுதி தலைவர் செளந்தரராஜனும் இவ்விழாவிக் கலந்து கொண்டு தனது தொகுதி காங்கிரசின் ஒத்துழைப்பை புலப்படுத்தினார்.

இது போன்ற சமய நம்பிக்கைகள் இளம் தலைமுறையினரிடையே மிகப் பெரிய ஒழுக்கத்தையும் பக்தியையும் விதைப்பதாக ஆசிரியை தமிழ்வாணி கருணாநிதி குறிப்பிட்டார். இவ்விழா, வாழையடி வாழையாக தொடர வேண்டும் என தனது விருப்பத்தை பதிவு செய்த அவர், இதனுள் பொதிந்திருக்கும் மெய்ஞானம் மாணவர்களை  நிச்சயமாக நல்வழிக்குக் கொண்டு வரும் என்று  நம்பிக்கை தெரிவித்தார்.