அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > தற்கொலைக்கு முயன்ற வசந்தபிரியா மூளைச்சாவு! சமூக ஆர்வலர் தகவல்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற வசந்தபிரியா மூளைச்சாவு! சமூக ஆர்வலர் தகவல்

ஜோர்ஜ்டவுன், ஜன.28-
கைப்பேசியைத் திருடியதாக சக மாணவர்கள் முன்னிலையில் காரசாரமாக ஆசிரியர்கள் விசாரித்ததால் மனமுடைந்து தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்ற இரண்டாம் படிவ மாணவி எம்.வசந்தபிரியா (வயது 13) தற்போது மூளைச்சாவிற்கு இலக்காகி இருப்பதாகவும் அவருக்கு சுவாசக்கருவி பொருத்தப்பட்டிருப்பதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் பாக்கியநாதன் கூறுகையில், செபெராங் ஜெயா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமட்டிருக்கும் வசந்தபிரியாவின் உடல் உறுப்புகள் செயலிழந்திருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். வசந்தபிரியா உடல்நலம் தேற வேண்டுமென நாங்கள் இறைவனைப் பிரார்த்திக்கிறோம் எனவும் செபெராங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் கவுன்சிலரும் வசந்தபிரியாவின் குடும்பத்திற்கு உதவிகளை வழங்கி வருகின்றவருமான டேவிட் குறிப்பிட்டார்.

வசந்தபிரியாவின் விவகாரம் தொடர்பில் போலீசும் கல்வியமைச்சும் விசாரணை நடத்தி வருகின்றது. பிராய் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை நிபோங் தெபாலில் உள்ள மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளியில் மாலை மணி 2.00 அளவில் கைப்பேசி திருடப்பட்டது தொடர்பில் வசந்தபிரியாவிடம் மூன்று ஆசிரியர்கள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.

அந்த ஆசிரியர்களில் ஒரு ஆசிரியை தனது ஐ போன் 6 கைப்பேசியை வசந்தபிரியா திருடியதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், இக்குற்றச்சாட்டை வசந்தபிரியா மறுத்தப்போது மற்றொரு ஆசிரியர் வசந்தபிரியாவின் சக மாணவர்கள் முன்னிலையில் அவரது பின்பகுதியில் அடித்ததாக கூறப்படுகிறது.  அதன் பின்னர் வசந்தபிரியா ஆசிரியர் அறையினுள் உள்ள ஓர் அறையில் சுமார் ஐந்து மணி நேரம் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு உணவுகள் வழங்கப்படவில்லை. கழிவரைக்கு செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

மாலை மணி 6.45 அளவில் கைப்பேசி காணாமல் போனதாக கூறிய ஆசிரியையின் கணவர் அப்பள்ளிக்கு வந்துள்ளார். திருடியதை வசந்தபிரியா ஒப்புக்கொள்ளவில்லை என்றால் போலீசுக்கு கொண்டு சென்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். அதன் பின்னர் அவர்கள் இருவரும் வசந்தபிரியாவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் தனது அறையினுள் சென்றவுடன் வசந்தபிரியாவின் பெற்றோரும் அந்த இருவரும் இவ்விவகாரத்தில் தீர்வை பெற வேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்து கிளம்பி சென்றதாக கூறப்படுகின்றது.

பின்னர் இரவு மணி 8.20 அளவில் வசந்தபிரியாவின் பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய போது அவரை அழைத்துள்ளனர். ஆனால், வசந்தபிரியா பதில் ஏதும் வழங்காததால் அறையின் கதவை உடைத்துள்ளனர். அப்போது, தனது துப்பட்டா துணியால் வசந்தபிரியா தூக்குமாட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. மயக்கமான நிலையில் வசந்தபிரியாவை அவர்கள் மீட்டனர். அதோடு, வசந்தபிரியா தனது பயிற்சி நூலில் சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு கூறும் விதமாக கைப்பேசியைத் தான் எடுக்கவில்லை என்றும் தனது பெற்றோருக்கும் பாட்டிற்கும் சென்று வருவதாக தமிழில் எழுதியுள்ளார்.

அதன் பின்னர் வசந்தபிரியாவின் பெற்றோர் அவரை சுங்கை பாக்காப் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பின்னர் அவர் செபெராங் ஜெயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  இதனிடையே, வசந்தபிரியாவின் நண்பர் ஒருவர் கூறுகையில், ஆசிரியர் அறையில் உள்ள சிசிடிவி காணொளியில் வசந்தபிரியாவைப் போல் நீண்ட முடி கொண்ட ஒருவர் அந்த அறையினுள் நுழைந்ததால் அந்த ஆசிரியைக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறினார்.

எங்களின் பயிற்சி புத்தகங்களை திரட்டிய வசந்தபிரியா தாமாகவே முன்வந்து அந்த ஆசிரியையின் மேஜையில் வைப்பதற்காக சென்றதால் அந்த ஆசிரியை சந்தேகப்பட்டுள்ளார் என அவர் கூறியதாக எப்.எம்.டி. செய்தி வெளியிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன