தைப்பூசத்தில் தமிழ்ப்பத்திரிக்கைகள், வேலை வாய்ப்பு முதலானவை குறித்து பிரச்சாரம்!

0
2

கோலாலம்பூர், ஜன.28-
வருகின்ற தைப்பூசத்தில் ஒன்றுப்பட்ட இந்திய இயக்கங்களின் கூட்டு முயற்சியில் தமிழ்ப்பத்திரிக்கைகள் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, தமிழ்ப்பள்ளிகள் விவகாரம், 2018ஆம் ஆண்டிற்கான தமிழன் விருதுகள் முதலானவைக் குறித்து பத்துமலைத் திருத்தலத்தில் பிரச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான உமாகாந்தன் தெரிவித்தார்.

தற்போது சந்திர கிரகணம் காரணத்தால் ஆலயத்தில் நடை மூடப்படுமா? மூடப்படாதா? என்ற கேள்வி முக்கிய விவகாரமாக இருந்து வருகின்றது. தைப்பூச மறுநாள் இந்த விவகாரத்தை மக்கள் மறந்து விடுவார்கள். ஆனால், இந்திய சமுதாயத்தில் இன்னமும் தீர்க்கப்படாமல் பல பிரச்னைகள் உள்ளன. அவ்வகையில், இந்த தைப்பூச விழாவில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பிரச்சார நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுவதாக அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார்.

அண்மையக் காலமாக தமிழ்ப்பள்ளி விவகாரம் தொடர்பில் செய்திகளை வெளியிட்டுவரும் தமிழ்ப்பத்திரிக்கைக்கு பலவகைகளில் மிரட்டல்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்ப்பள்ளிகளுக்கு அடுத்த நிலையில் இந்நாட்டில் தமிழை வாழ வைப்பதில் தமிழ்ப்பத்திரிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவ்வகையில், தமிழ்ப்பத்திரிக்கைகளின் பாதுக்காப்பை முன்னிறுத்தியும் இந்நாட்டிலுள்ள இந்தியர்கள் தமிழ்ப்பத்திரிக்கைகளை வாங்கி அவற்றிற்கு ஆதரவு வழங்கும் வகையிலும் இந்த பிரச்சாரத்தில் வலியுறுத்தப்படவுள்ளது.

தமிழ்ப்பள்ளி விவகாரத்தில் பலர் அடிப்படை தகவல்கள் இல்லாமல் போராடி வருகின்றனர். தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்கம் மானியங்களைக் கொடுத்துவிட்ட நிலையில் ஆலோசகர் பிரிவில்தான் இத்தகைய பிரச்னைகள் நிலவுகின்றன. ஆகையால், ஆலோசகர் பிரிவிடம் இருந்துதான் விளக்கத்தை நாம் கோர வேண்டும்.

மேலும், நம் நாட்டில் இந்திய இளைஞர்களுக்கு போதுமான வேலை வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. இது குறித்து தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சில் வினவப்பட்ட போது, எதையும் முறையான வழியில் கேட்டால்தான் கிடைக்கும் என அவர்கள் கூறினர். குறிப்பாக, இந்தியர்கள் கேட்பதைத்தான் அரசாங்கம் வழங்குவதாக அவர்கள் கூறினர். ஆகையால், இம்முறை சுமார் 1000 வேலை வாய்ப்புகளைக் கேட்டு சுமார் 10,000 கையெழுத்து வேட்டைகளை நடத்தவிருக்கிறோம். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அமைச்சில் அவற்றை வழங்குவோம்.

மேலும், பொறுப்பற்ற பதிப்பகங்களில் சர்ச்சைக்குரிய நூல்கள் இன்னமும் சந்தைகளில் விற்பனையில் உள்ளன. சம்பந்தப்பட்ட நூல்கள் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்ட போதிலும் இன்னமும் அவை விற்பனையில் உள்ளது. மக்களுக்கும் அது குறித்த தகவல்கள் தெரியவில்லை. அதை இந்த பிரச்சார நிகழ்ச்சியில் தெரியப்படுத்துவோம்.

விரைவில் 15 துறைகளில் சிறந்து விளங்கும் சுமார் 30 பேரை கௌரவிக்கும் பொருட்டு 2018ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சியையும் நடத்தவிருக்கிறோம். இது குறித்து பத்துமலையில் திரளவிருக்கும் பொதுமக்களிடம் தெரிவிப்போம் என உமாகாந்தன் கூறினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டி.எச்.ஆர். அறிவிப்பாளர் கவிமாறன், ரஜினி, மகாதேவன், பரமேஸ், சித்தார்த் உள்பட அரசு சார்பற்ற இந்திய இயக்கங்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.