அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > இனியும் காரணம் கூறாமல் எனது முன்னாள் கணவரை கைது செய்யுங்கள்! இந்திராகாந்தி
மற்றவைமுதன்மைச் செய்திகள்

இனியும் காரணம் கூறாமல் எனது முன்னாள் கணவரை கைது செய்யுங்கள்! இந்திராகாந்தி

புத்ராஜெயா, ஜன.29
எனது 3 பிள்ளைகளை எனது முன்னாள் கணவர் முஹம்மட் ரீடுவான் அப்துல்லா இஸ்லாத்திற்கு மதமாற்றியது செல்லாது என கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைத் தொடர்ந்து, அவரை மலேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ஃபுசி ஹருண் கைது செய்ய வேண்டுமென பாலர்ப்பள்ளி ஆசிரியையான எம்.இந்திராகாந்தி கோரிக்கை விடுத்தார்.

தீர்ப்பு கிடைத்து விட்டது. அதனால், போலீஸ் படைத்தலைவர் இனி சாக்குபோக்குகள் கூற முடியாது. போலீஸ் இப்பொழுதே நடவடிக்கையை எடுக்க வேண்டுமென தனது வழக்கறிஞரான எம்.குலசேகரனுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ரீடுவானைக் கைது செய்யும்படி கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆயினும், அப்போதைய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலீட் அபு பாக்கார், இவ்விவகாரத்தில் சிவில் நீதிமன்றம் மற்றும் ஷரியா நீதிமன்றத்திற்கும் இடையில் முரணாக உள்ளதால் அந்த கைது நடவடிக்கையை எடுக்க முடியவில்லை என கூறியிருந்தார்.

இந்திராகாந்தியின் பிள்ளைகளான தேவி தர்ஷினி, கரண் டினேஸ் ஆகிய இருவருக்கும் இப்போது வயது 21 மற்றும் 20 ஆகின்றது. கடைசி பிள்ளையான பிரசன்னா டிக்சாவிற்கு 10 வயதாகவுள்ளது. அவரை ரீடுவான் 2009ஆம் ஆண்டு அழைத்துக்கொண்டு தலைமறைவானார். இன்றைய தீர்ப்பில் கூட்டரசு நீதிமன்றம் இந்திராகாந்தியின் 3 பிள்ளைகளை ரீடுவான் ஒருதலைபட்சமாக மதமாற்றியது செல்லாது என தீர்ப்பளித்தது. பிள்ளைகளை மதம் மாற்றுவதாக இருந்தால் அப்பா மற்றும் அம்மாவின் சம்மதங்கள் பெறப்பட வேண்டும்.

இவ்விவகாரத்தில் சிவில் நீதிமன்றம் மட்டுமே தீர்ப்பை அளிக்க முடியுமென நீதிமன்றம் தெரிவித்தது. இந்த தீர்ப்பின் வாயிலாக 9 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்திராகாந்தியின் சட்ட போராட்டத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. தனக்கு ஆதரவளித்த அனைத்து தரப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்ட இந்திராகாந்தி, தனது சாதகமான தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். தீர்ப்பு எனக்கு சாதகமாக இருந்தாலும் எனது மகள் எங்கு இருக்கிறாள் என தெரியவில்லை. அவளை எப்போது பார்ப்பேன் என்றும் தெரியவில்லை என கூறினார்.

குலசேகரன் கூறுகையில், கூட்டரசு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வாயிலாக பிள்ளைகளின் மதமாற்று விவகாரத்தில் ஷரியா நீதிமன்றம் தவறான தீர்ப்பை வழங்கும் போது சிவில் நீதிமன்றம் அது குறித்து விசாரிப்பதற்கு உரிமை உள்ளதைக் காட்டுவதாக கூறினார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன