வங்சா மாஜூ, ஜன.29-
கூட்டரசு பிரதேசத்தில் வாழும் மக்கள் சொந்த வீடுகளைக் கொண்டிருக்கும் நோக்கில் அவர்கள் புதிய வீடுகளை வாங்கும் வகையில் அவர்களுக்கு கடனுதவி வழங்குவதற்காக கூட்டரசு பிரதேச அறவாரியத்தின் கீழ் 5.3 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை இந்தியர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கூட்டரசு பிரதேச அமைச்சரும் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளருமான டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் வலியுறுத்தினார். இந்தியர்கள் சொந்த வீடுகளைக் கொண்டிருக்கும் வகையில் வீடமைப்பு திட்டங்களில் கோட்டா முறையில் ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. இந்தியர்களின் நலனில் அக்கறைக்கொண்டுள்ள தேசிய முன்னணி அரசாங்கம் அவர்களுக்காக இத்தகைய திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

நாடி ராக்யாட் மலேசியா இயக்கத்தின் ஏற்பாட்டில் மக்கள் பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய அவர் மேற்கண்டவாறு சொன்னார்.

பல்லின மக்களை கொண்டிருக்கும் மலேசியா தனித்துவமிக்க நாடாக திகழ்கிறது. பல்லின மக்களின் பெருநாள்களை ஒற்றுமையாக கொண்டாடுகிறோம். தேசிய முன்னணி அரசாங்கத்தால் மட்டுமே மக்களுக்கு சிறந்தனவற்றை மேற்கொள்ள முடியும். நம்பிக்கைக் கூட்டணியினர் கூறுவதில் வல்லவர்கள் தவிர செயல்பாட்டில் அல்ல. இவ்வேளையில், இந்த பொங்கல் விழாவில் பல்லின மக்களை வரவழைத்துள்ள நாடி ராக்யாட் இயக்கத்தைப் பாராட்டுவதாக டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் கூறினார்.

தொடர்ந்து, வங்சா மாஜூ தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஹாஜி முஹம்மட் ஷாஃபெய் பின் அப்துல்லா கூறுகையில், வங்சா மாஜூவிலுள்ள ஐயனார் ஆலயத்தின் அருகாமையில் குறிப்பிட்ட நிலம் உள்ளதாகவும் அந்த நிலத்தை தற்காலிக நிலம் (டி.ஓ.எல்.) அடிப்படையில் அந்த ஆலயம் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதியைப் பெற்றுத் தரும்படி டத்தோஸ்ரீ தெங்கு அட்னானிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டத்தோஸ்ரீ டாக்டர் ஹாஜி முஹம்மட் ஷாஃபெய், வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் வங்சா மாஜூ நாடாளுமன்ற தொகுதியில் தாம் போட்டியிடவிருப்பதாகவும் தமக்கு மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என பல்லின மக்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறினார்.

13ஆவது பொதுத்தேர்தலில் இத்தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு நான் தோல்வி கண்டால் இன்று வரையில் மக்கள் சேவையை விடாமல் ஆற்றி வருகிறேன். ஆறு இந்தியர்களுக்கு மாலை விற்பனை உள்ளிட்ட வியாபாரங்களை மேற்கொள்வதற்கு கடை உரிமையை பெற்றுத் தந்துள்ளேன்.  இதுமட்டுமின்றி, நாடி ராக்யாட் மலேசியா உள்பட அரசு சார்பற்ற இந்திய இயக்கங்களுக்கும் உதவிகளைத் தாம் வழங்கியிருப்பதாகவும் இந்த பொங்கல் விழாவிற்கு தம்மை அழைத்த நாடி ராக்யாட் இயக்கத்திற்கும் நன்றிக் கூறிக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

நாடி ராக்யாட் மலேசியாவின் அழகன் கூறுகையில், தனது இயக்கத்திடம் சுமார் 7500 இந்திய வாக்காளர்கள் இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் தேசிய முன்னணியை ஆதரிப்பார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், இத்தொகுதியில் டத்தோஸ்ரீ ஷாஃபெய் சிறப்பான முறையில் மக்கள் சேவையை ஆற்றி வருவதாகவும் அவருக்கு நாடி ராக்யாட் மலேசியா வலுவான ஆதரவை அளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பொங்கல் வைத்தல், பானையை உடைத்தல் முதலான போட்டிகள் நடைபெற்றதோடு வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்துக்கொண்டனர்.