செராஸ், ஸ்ரீ கோட்டை சங்கிலிக் கருப்பர் உலுலங்காட் ஆலய கும்பாபிஷேகத்தை நடத்த எதிர்ப்பு!

0
9

கோலாலம்பூர், ஜன.30-
செராஸ் தாமான் ராசா சாயாங்கிலுள்ள 11 ஆண்டுகள் வாய்ந்த ஸ்ரீ கோட்டை சங்கிலிக் கருப்பர் உலு லங்காட் ஆலயத்தில் வருகின்ற 4ஆம் தேதி ஒரு தரப்பினரின் ஏற்பாட்டில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் அதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென அந்த ஆலயத் தலைவரான புவனேஸ்வரன் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் அந்த ஆலயத்தை நாங்கள்தான் கட்டி இன்று வரையில் பூஜைகளை செய்து வருகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திடிரென எங்களிடம் வந்த ஒருவர் இந்த ஆலயத்தைக் கட்டித் தருவதாக கூறினார். இந்த ஆலயத்தின் மீது தமக்கு ஆர்வம் இருப்பதாகவும் கூறினார்.

அவரை நம்பி எங்களுடன் இணைத்துக்கொண்டோம். அதன் பின்னர், அந்த ஆடவர் எங்களுக்கு தெரிவிக்காமல் சிலருடன் இணைந்து அந்த ஆலயத்தை தேசிய சங்கப் பதிவிலாகாவில் பதிந்துள்ளார். இந்த ஆலயத்தைக் கட்டி இன்று வரையில் பூஜைகளை செய்துவரும் நாங்கள் இப்பொழுது புறக்கணிக்கப்பட்டுள்ளோம்.

இந்த நிலையில் வருகின்ற 4ஆம் தேதி இந்த ஆலயத்தில் மகா கும்பாபிஷேகத்தை நடத்தவிருக்கின்றனர். இதற்காக, அழைப்பிதழ் அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் புவனேஸ்வரன் சொன்னார். இந்த ஆலயத்தின் நிலத்தை முறையாக பதிவதற்கான வேலைகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களுக்கு சட்ட ஆலோசகராக உமாகாந்தன் இருக்கிறார். அவர் அதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றார்.

மேலும், இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை நிறுத்தும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுக்கவிருக்கிறோம். எங்களது ஒரே கோரிக்கை பொது ஆலயமான இந்த ஆலயத்தின் பொறுப்பாளர்களை பொதுவான தேர்தல் வாயிலாக தேர்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை ஆலயத்தின் உண்மையான பராமரிப்பாளர்களான நாங்கள் மேற்கொண்டு வருவதாக புவனேஸ்வரன் கூறினார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் 100க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.