செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > திறமையான விளையாட்டாளர்களை அடையாளம் காண வேண்டும்!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

திறமையான விளையாட்டாளர்களை அடையாளம் காண வேண்டும்!

கோலாலம்பூர், ஜூலை 25-

தேசிய நிலையில் மலேசியாவை பிரதிநிதிக்கும் தரமான விளையாட்டாளர்களை உருவாக்க, அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென பேரின்பம் எனப்படும் மலேசிய புது இந்திய அறப்பணி இயக்கத்தின் தேசியத் தலைவர் யு. தாமோதரன் வலியுறுத்தினார்.

தஞ்சோங் மாலிமில் நடந்த சுக்கிம் விளையாட்டுப் போட்டியில் பேரின்பம் ஹயாஷி ஹா கராத்தே கழகத்தைச் சேர்ந்த 8 பேர் கராத்தே போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றார்கள். இவர்களை சிறப்பிக்கும் வகையில் புக்கிட் பிந்தாங்கில் உள்ள நொவோடெல் தங்கும் விடுதியில் நடந்த விருந்து உபசரிப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

கடந்த ஆண்டு பேரின்பம் ஹயாஷி ஹா கராத்தே கழகமும் இணைந்து, தமிழ்ப்பள்ளிகள் கராத்தே விளையாட்டாளர்களை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் சிகரம் என்ற திட்டத்தை முன்னெடுத்தது. இதற்கு செடிக் உதவிகரம் நீட்டியது.

அந்தாண்டு கராத்தே போட்டியில் கலந்து கொண்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை இலவசமாகவும் வழங்கினோம். ஆனால் இந்த ஆண்டு செடிக்கின் மானியம் கிடைக்கவில்லை. இருப்பினும் 1 ஆண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி விட்டோம். அவர்களை பாதியில் விட்டுவிடக்கூடாது என்பதற்கான இவ்வாண்டும் சொந்த செலவில் பேரின்பம் ஹயாஷி ஹா கராத்தே கழகமும் இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

இதை பிரபலபடுத்த பேரின்பம் விரும்பவில்லை. ஆனால் இப்போதும் பெற்றோர்கள் இது செடிக் திட்டம் என நினைத்துக் கொண்டு, கராத்தே சீருடைகளை கேட்கிறார்கள். இன்னும் சில இதுதொடர்பான புகாரை செடிக்கிடமும் கூறியுள்ளார்கள். பயிற்சிகளை வழங்குவதற்கான அனைத்து செலவுகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இருப்பினும் இந்த திட்டம் அனைத்து தமிழ்ப்பள்ளி மாணவர்களையும் சென்றடைய செடிக் மானியம் அவசியெமன தாமோதரன் கூறினார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் சுக்கிம் போட்டியில் தங்கம் வென்ற கூட்டரசு பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீமூர்த்தி, கிவன், பிரியராஜ், தவிநேசன், நோர் சலினா, கோகிலவாணி, விக்னேஸ்வரி ஆகியோருடன் பகாங்கை சேர்ந்த குகன், சவினேஸ்வரன், பிரேமராஜ் ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

மாவட்ட, மாநில மற்றும் தேசிய ரீதியில் வெற்றி பெறுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தினால், இந்த ஊக்கம் அவர்களை மேலும் சாதிக்கத் தூண்டுமென கராத்தே மாஸ்டர் அறிவழகன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கராத்தே மாஸ்டர் டாக்டர் டி.பொன்னையா, பி.தென்னவன், பி. தியாகு, யாமினி, வதனா உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன