பத்துகேவ்ஸ், பிப்.1-

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஆலயங்களில் சுமார் 34 ஆலயங்களுக்கு வெ.465,000 மானியம் வழங்கப்பட்டது. இம்மானியங்களுக்கான காசோலையை மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி எடுத்து வழங்கினார்.

ஆலயங்களுக்கான காசோலையை எடுத்து வழங்கி உரையாற்றிய மந்திரி பெசார் சிலாங்கூர் மாநில அரசாங்கம் எந்தவொரு இனத்தையும் புறக்கணித்ததில்லை என்றும் இங்கு அனைவரும் சமமான உரிமையையும் மதிப்பையும் பெறுவதாகவும் நினைவுறுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச கொண்டாட்டத்திற்கு மாநில அரசாங்கம் பெரும் பங்காற்றுவதாகவும் மாநில அரசாங்கத்தின் ஒத்துழைபோடும் ஆதரவோடும் தைப்பூசம் மிகவும் சிறப்பாக நடந்தேறி வருவதாகவும் அவர் கூறினார்.

கொண்டாடப்படும் தைப்பூச திருநாள் இனங்களுக்கு மத்தியிலான ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் மேலோங்க வைப்பதோடு அஃது தொடர்ந்து நிலைக்கொள்ளவும் செய்வதாக அவர் மேலும் கூறினார்.

பல்வேறு மதம், இனம் மற்றும் நம்பிக்கையினை சார்ந்திருந்தாலும் நாம் அனைவரும் அமைதியாகவும் சுபிட்சமாகவும் அதேவேளையில் புரிந்துணர்வோடும் வாழ்வதே சிலாங்கூர் மாநிலத்தின் தனித்துவம் என்றும் அஸ்மின் அலி கூறினார்.

தைப்பூச கொண்டாட்டத்திற்கு இந்துக்களுடன் சீனர்,மலாய்காரர்களையும் பத்துகேவ் வளாகத்தில் காண்பது நமது தேசிய ஒருமைப்பாடினை பிரதிபலிப்பதாக கூறிய அவர் இதுவும் தைப்பூச திருநாளின் தனித்துவம் எனலாம் என்றார்.உலகில் வேறு எங்கும் காண முடியாத உன்னதம் இவை என்றார்.

பத்துகேவ்ஸ் முருகன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற ஆலயங்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வில் மந்திரி பெசாருடன் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி.கணபதிராவ்,பத்துகேவ் சட்டமன்ற உறுப்பினர் அமிரூடின் சஹாரி,அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் மற்றும் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.மணிவண்ணம் ஆகியோரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி, சிலாங்கூர் கினி)