பெங்களூர்:

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் தற்போது சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராகி வரும் இந்த சம்பா சாகுபடி பயிர்களுக்கு கடந்த சில தினங்களாக காவிரியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பா பயிர்கள் முழுமையாக விளைச்சலுக்கு வருமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

சம்பா பயிர்களை கருக விடாமல் காப்பாற்ற வேண்டுமானால் மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். ஏற்கனவே மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்துக்காக அதிக தண்ணீர் திறக்கப்பட்டு விட்டதால், அணையில் தண்ணீர் இருப்பு குறைந்து விட்டது. வடகிழக்கு பருவ மழை காலமும் முடிந்து விட்டதால், இனி மழை பெய்து அணைக்கு தண்ணீர் வரப் போவதில்லை.

எனவே காவிரி டெல்டா பாசனப் பகுதியில் உள்ள சம்பா பயிர்களை காப்பாற்ற வேண்டுமானால் கர்நாடகாவிடம் கை ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழ்நிலை உள்ளது. கர்நாடக அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு நடுவர் மன்ற உத்தரவுப்படி இந்த சீசனில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இதை வலியுறுத்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், “காவிரி தண்ணீர் விவகாரம் குறித்து சந்தித்துப் பேச விரும்புகிறேன். எனவே பெங்களூரில் தங்களை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி தர வேண்டும்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்க சித்தராமையா மறுத்து விட்டார். கர்நாடகாவில் பட்ஜெட் கூட்ட தொடர் நடக்க இருப்பதால், இப்போது சந்திக்க இயலாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட உள்ளது. மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் சித்தராமையா அனைத்துத் தரப்பினரையும் கவர பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்து விட்டால், கர்நாடக மாநில விவசாயிகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியதிருக்கும். எனவேதான் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இப்போதைக்கு சந்திக்க இயலாது என்று அவர் கை விரித்துள்ளார்.

இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர இயலாது என்று கர்நாடக மாநில நீர் வளத்துறை மந்திரி எம்.பி. பாட்டீல் கூறியுள்ளார். பெங்களூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சம்பா பாசனத்துக்காக காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

கர்நாடகா அணைகளில் எங்களது தேவையை பூர்த்தி செய்யவே தண்ணீர் போதுமான அளவுக்கு இருப்பு இல்லை. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு எப்படி தண்ணீர் திறந்து விட முடியும்?

தண்ணீர் கேட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெங்களூர் வந்தால் அவர் தலைமையிலான குழுவினரை நாங்கள் மனதார வரவேற்போம். அவரிடம் கர்நாடகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாக எடுத்துரைத்து சொல்லி அனுப்பி வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையாவின் தயக்கம் மற்றும் மந்திரி எம்.பி.பாட்டீல் பேச்சு மூலம் தமிழ்நாட்டுக்கு கர்நாடகாவில் இருந்து இப்போது தண்ணீர் கிடைக்காது என்றே தெரிகிறது. இதனால் சம்பா சாகுபடி பயிர்கள் நிலை என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மீதான வழக்கில் உத்தரவுகள் விரைவில் வர உள்ளது. 5-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு புதிய உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று தெரிகிறது. அதில் சாதகமான உத்தரவு வந்தால்தான் சம்பா பயிர்களை காப்பாற்ற முடியும்.