மென்செஸ்டர், பிப்.6 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியின் அடுத்த பருவத்திலும் மென்செஸ்டர் யுனைடெட், மென்செஸ்டர் சிட்டியை நெருங்க முடியாது என மென். யுனைடெட் கிளப்பின் முன்னாள் ஆட்டக்காரர் வெயின் ரூனி தெரிவித்துள்ளார்.

இந்த பருவத்தில் மென்செஸ்டர் சிட்டி , மென்செஸ்டர் யுனைடெட்டைக் காட்டிலும் 13 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளது. பிரீமியர் லீக் போட்டியில் சிறந்த ஆட்டத்தரத்தை வெளிப்படுத்தி வரும் மென்செஸ்டர் சிட்டி , 2008 ஆம் ஆண்டு தொடங்கி 2012 வரை ஐரோப்பிய கால்பந்துப் போட்டிகளில் அதிரடி படைத்த பார்சிலோனாவை கிட்டத் தட்ட நெருங்கி விட்டதாக ரூனி தெரிவித்துள்ளார்.

நடப்பில் இருக்கும் மென்செஸ்டர் சிட்டி அணியில் நிர்வாகி பெப் குவார்டியோலா இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆட்டக்காரர்களை இணைத்து கொண்டால் அந்த அணி மேலும் வலுபெறும் என ரூனி தெரிவித்துள்ளார். இதனால் மென்செஸ்டர் யுனைடெட் அந்த அணியை நெருங்க இயலாது என ரூனி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே மென்செஸ்டர் யுனைடெட்டில் இணைந்துள்ள அலெக்சிஸ் சன்சேஸ், அந்த கிளப்புக்கு மிக சிறந்த ஆட்டக்காரராக விளங்குவார் என ரூனி குறிப்பிட்டார். மென்செஸ்டர் யுனைடெட் போன்ற கிளப்புக்கு சன்சேஸ் போன்ற போராட்டமிக்க ஆட்டக்காரர் தேவை என அவர் சொன்னார்.

அதேவேளையில் மென்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து வெளியேறிய மிக்கிதேரியன் குறித்தும் கருத்துரைத்துள்ளார். அர்செனல் அணியில் தாக்குதல்களை முன்னெடுக்க மிக்கிதேரியனுக்கு அதிக சுதந்திரம் கிடைத்திருப்பதாகவும் , மென்செஸ்டர் யுனைடெட்டைக் காட்டிலும் அர்செனல் கிளப்தான் அவருக்கு சிறந்த தேர்வு என்றும் ரூனி கூறினார்.