செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > அரசு இந்திய சமுதாயத்திற்கு நல்லதையே செய்து வருகிறது  -டத்தோ லோகபாலா
முதன்மைச் செய்திகள்

அரசு இந்திய சமுதாயத்திற்கு நல்லதையே செய்து வருகிறது  -டத்தோ லோகபாலா

கோலாலம்பூர், பிப்  6-
ரூமாவீப் எனப்படும் கூட்டரசு பிரதேச மலிவு விலை வீடமைப்பு திட்டத்தில் இந்தியர்களுக்காக 10 விழுக்காடு கோட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் கூறியது உண்மையே. இத்திட்டத்தில் இந்தியர்களுக்கு நன்மையில்லை என வழக்கறிஞர் வேதமூர்த்தி கூறியது உண்மைக்கு புறம்பானது என கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் டத்தோ லோகபாலா சுட்டிக் காட்டியுள்ளார்.

2013ஆம் ஆண்டு தொடங்கி அரசாங்கத்தின் வாயிலாக கூட்டரசு பிரதேசத்தில் இந்தியர்களுக்கென பல திட்டங்களையும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடர்ந்து செய்து வருகிறது. குறிப்பாக வீடமைப்பு திட்டம், கோவில் பிரச்னை, வர்த்தகம் என பல பிரச்னைகளுக்கு தீர்வுக் காணப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பாலான இந்தியர்கள் நன்மையடைந்துள்ளனர். அவ்வாறு இருந்தும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாவது வேதனை அளிக்கிறது என இன்று கோலாலம்பூர் மாநகர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

இந்திய சமூகத்தின் நலன் கருதி நான் வைக்கும் பரிந்துரைகளுக்கு தெங்கு அட்னான் பல முறை அனுமதிகளை வழங்கியுள்ளார். அந்த வகையில், செந்தூல் ராயா, கம்போங் பண்டான், புக்கிட் கியாரா ஆகிய இடங்களில் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவர்களுக்கும் குறைந்த விலையில் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது. பல கோவில்கள் எதிர்நோக்கி வந்த நிலப்பிரச்னைகளுக்கு தீர்வுக் காணப்பட்டதோடு இந்தியர்கள் வர்த்தக ரீதியாக தங்களை உயர்த்திக் கொள்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்து தந்திருக்கிறோம். மக்களின் நலன் கருதி நாங்கள் செய்த இந்த நற்செயகளில் நல்லதை பார்க்காமல் குறைகளை மட்டும் கூறி வருவது ஏன் என லோகபாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே, ரூமாவீப் வீடமைப்பு திட்டம் பற்றி தகவல்கள் இந்தியர்களை சென்றடைய வேண்டும். இந்த வீடமைப்பு திட்டத்திற்கு இந்தியர்கள் முடிந்த வரை விரைவில் பதிந்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பம் செய்யத் தெரியாதவர்கள் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திடம் விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.

எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தல் இந்திய சமூகத்திற்கு முக்கியமான தேர்தல். அரசாங்கம் இந்தியர்களுக்காக நிதியுதவி, தமிழ்ப்பள்ளி நிர்மாணிப்பு, வீடமைப்பு திட்டம் என பல நடவடிக்கைகளையும் திட்டங்களையும் செய்து வருகிறது. இதனை நல்ல முறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன