வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > இந்து சங்கத் தலைவர் எப்போது தமிழினத்தின் தலைவர் ஆனார்? தமிழ்ப்புகழ் கேள்வி
சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்து சங்கத் தலைவர் எப்போது தமிழினத்தின் தலைவர் ஆனார்? தமிழ்ப்புகழ் கேள்வி

கோலாலம்பூர், பிப். 8-

சமூக வலைத்தளமான முகநூலில், மலேசிய பிரதமருக்கு கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு ஒன்று பரவலாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஏப்ரல் 14ஆம் நாளை, இந்து புத்தாண்டு அல்லது இந்தியர் விழா என்ற அடிப்படையில் ஏற்று, அந்நாளை மலேசிய பொதுவிடுமுறை பட்டியல் இணைக்க கோரி கொடுக்கப்பட்டிருக்கும் மனுவே அது. இதனை தமிழர் களம் மலேசியா அமைப்பின் தேசிய தலைமைப் பொறுப்பாளரான திரு.தமிழ்ப்புகழ் குணசேகரன் வன்மையாக கண்டிப்பதாக தனது கண்டத்தை வெளிப்படுத்தினார்.

மலேசிய இந்து சங்கம், மலேசிய தெலுங்கு சங்கம், மலேசிய மலையாளி சங்கம் உட்பட பல அமைப்புகளின் தலைவர்களின் கையொப்பமிடப்பட்டிருக்கும் அந்த மனுவில், எந்த தமிழர் அமைப்பும் இணைக்கப்படாத நிலையில், இந்து சங்கத் தலைவர் திரு.மோகன் சான் அவர்கள், தன்னை தமிழர் தலைவர் என்று தானே தன்னை அடையாளப்படுத்தி மலேசியத் தமிழர் பிரதிநிதிகள் உரிமையை நயவஞ்சகமாக களவாடியிருப்பது ஏற்க முடியா குற்றம் என சாடினார்.

இத்தனை காலம் ஏப்ரல் 14ஐ தமிழ்ப்புத்தாண்டு என்று பிதற்றி வந்த மோகன் சான். இப்போது இந்து புத்தாண்டு என்று சொல்லி அவசரமாக மனு கொடுக்கும் காரணம், தமிழர் பெருவிழாவாகிய பொங்கலுக்கு விடுமுறை கிடைக்காது தடுக்கும் ஒரு நயவஞ்சக செயல் என அவர் குறிப்பிட்டார்.

சரி, அவர் தமிழ்ப்புத்தாண்டு இந்து புத்தாண்டு அல்லது மோகன் புத்தாண்டு என்றுகூட சொல்லிக்கொள்ளட்டும். ஆனால் எப்போதிருந்து திரு.மோகன் சான் தமிழர் தலைவரானார் என்றும் முதலில் அவர் எப்படி தமிழர் ஆனார் என்றும் கேள்வி எழுப்பினார்.

மலேசிய தமிழர்களின் எதிர்பார்ப்பு பொங்கலுக்கு விடுமுறை வேண்டுவதில் இருக்க, இப்போ ஏப்ரல் 14 விடுமுறைக்கு என்ன அவசியம் வந்தது. அதுமட்டுமின்றி மோகன் சானின் இச்செயலுக்கு, மலேசிய இந்தியர் வரிசையில் இருக்கும் மற்ற சிறுபான்மை இனத் தலைவர்களும் துணை நின்றிருப்பது, பெரும்பான்மை தமிழர்களுக்கு இழைத்த துரோகம் என்றும் அவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினால்.

இவ்விவகாரத்தில் திரு.மோகன் சான் அவர்கள் தன் தவற்றை ஏற்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் கொடுத்த மனுவின் வாயிலாக தன்னை தமிழர் தலைவர் என்றது தவறு என மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும், மேலும் இனி தமிழர்கள் உரிமையில் தமிழரல்லாத இவர்களின் நடவடிக்கைகள் தொடரக் கூடாது என்றும், அதற்கு மலேசிய தமிழர் அமைப்பாளர்கள் உடனடி தீர்வுகளை முன்வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ்ப்புகழ் குணசேகரன் தெரிவித்தார்.

இப்படி வந்தவர் போனவர் எல்லாம் தன் சுயலாபத்திற்காக தன் சொந்த இனத்தை மறைத்து தமிழர்கள் உரிமைகளை சூரையாடும் இழிவான செயலை உடனடியாக கைவிட வேண்டும். தமிழர் அல்லாதவர்கள் தங்களை தமிழராக காட்டிக்கொண்டு, இனமறைப்பு செய்து தமிழர்களுக்கான தலைமைகளை கைப்பற்றி வருவது, தமிழர்கள் இடையே பெரும் குழப்பத்தையும் ஒற்றுமை சீர்கேட்டையும் உஉளவியல் ரீதியாக திணிக்கும் செயலாகும். இதுபோன்ற செயல்களை தமிழரல்லாத வேற்றினத்தார்கள், இந்தியர் என்ற கருவியை பயன்படுத்தி கீழறுப்பு செய்வது அருவருப்பான செயலாகும்.

உடனடியா மோகன் சான் உட்பட தமிழரல்லாதார் இச்செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் இது வருங்காலத்தில் பெரும் விளைவுகளை உண்டாக்கும், பின் வருந்தி பயனில்லை என்றும் எச்சரித்தார் தமிழர் களம் மலேசியா அமைப்பின் தேசிய தலைமைப் பொறுப்பாளர் திரு.தமிழ்ப்புகழ் குணசேகரன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன