கோலாலம்பூர், ஜூலை.25 – 

அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் 1 எம்டிபி எனப்படும் ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான விவகாரங்களைப் பெரிதுப்படுத்தியதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்கிழமை கோலாலம்பூரில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூட்டத்தில் உரையாற்றியபோது நஜிப் இதனைத் தெரிவித்தார். 1எம்டிபி நிர்வாகத்தில் சில குறைபாடுகள் இருந்தது உண்மைதான் என்று கூறிய அவர் அவற்றைச் சரிசெய்யுமாறு தாமே பணித்ததாகவும் கூறினார்.

“1எம்டிபி-இல் பிரச்னைகள் இருந்தாலும் அரசியல்வாதிகள் சிலர் அதை ஊதிப் பெரிதுபடுத்தி விட்டனர். அவர்களின் நோக்கம் தேர்தல்களுக்கிடையில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதுதான்.

“ஆக, உண்மையில் 1எம்டிபி ஒரு பிரச்னை அல்ல. 1எம்டிபி இல்லையென்றால் அரசாங்கத்தைச் சட்டவிரோதமாகக் கவிழ்க்க வேறு ஏதாவதொன்றைக் கையிலெடுத்துக் கொண்டிருப்பார்கள்”, என நஜிப் அக்கூட்டத்தில் கூறினார்.

இன்வெஸ்ட் கேஎல் 2017 என்னும் அந்த முதலீட்டாளர் மாநாட்டில் 150க்கு மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் 900 பேராளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.