கோலாலம்பூர், பிப். 7-
அறம், பொருள், இன்பம் என அனைத்தும் அடங்கிய திருக்குறளின் உன்னதத்தை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நல்ல வாழ்க்கைக்கு வித்திடும் நெறிமுறைகளை கொண்ட இந்தத் திருக்குறளை மாணவர்களுக்கு நன்முறையில் கற்றுக் கொடுப்பது ஆசிரியர்களின் தலையாயக் கடைமையாகும் என ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தெரிவித்தார்.

ஒரு மனிதன் நல்ல வாழ்க்கையை வாழ்ந்திட தேவையான விஷயங்களை இந்தத்திருக்குறள் உள்ளடக்கியுள்ளது. திருக்குறளில் கூறப்பட்ட வாழ்வியல் நெறிமுறைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் சிறந்த வாழ்க்கை பயணத்தை தொடங்கலாம். அதனால்தான், திருக்குறள் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குவதோடு அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது என இன்று பத்துமலை தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, எதிர்வரும் ஏப்ரல் 28, 29ஆம் தேதிகளில் கலைக்கூடம் அருகே வள்ளுவர் விழா பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் திருக்குறளை மனனம் செய்து சிறப்பான முறையில் ஒப்பிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த வள்ளுவர் விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது என டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

இந்த திருக்குறள் புத்தகம் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் பத்துமலை தமிழ்ப்பள்ளியில் 1,200 மாணவர்களுக்கு திறக்குறள் புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. தலைநகர், அப்பர் தமிழ்ப்பள்ளிக்கும் இந்த திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. அப்பள்ளியின் பிரதிநிதியாக துணைத் தலைமையாசிரியை திருமதி ஐனா புத்தகத்தை பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் புவான்ஸ்ரீ மல்லிகா நடராஜா, பத்துமலை தமிழ்ப்பள்ளியின் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் டத்தோ டாக்டர் ஏ.டி.குமரராஜா, பள்ளி மேலாளர் வாரியத் துணைத் தலைவர் டத்தோ சிவகுமார், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகத்தை எடுத்து வழங்கினர்.