கெராக்கான் ஆட்சியின்போது பினாங்கில் ஊழல் இல்லை – லியாங் தெக் மெங் !

0
15

செராஸ், பிப்.8 – 

பினாங்கு மாநிலத்தில் 39 ஆண்டுகள் கெராக்கான் கட்சி ஆட்சி புரிந்தபோது,  அந்த கட்சியின் எந்த ஒரு தலைவரும் ஊழல் பிரச்சினையில் சிக்கி கொண்டதில்லை என கெராக்கான் கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ லியாங் தெக் மெங் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை அக்கட்சியின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் லியாங் இவ்வாறு தெரிவித்தார்.

ஆனால் தற்போது டி.ஏ.பி கட்சியின் தலைமையிலான பினாங்கு அரசாங்கம் இரண்டு மிகப் பெரிய ஊழல் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. பினாங்கு முதலமைச்சர் லிம் குவாங் எங், ஆடம்பர வீடு ஒன்றை வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார். அதேவேளையில் பினாங்கு மாநிலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கடலடி சுரங்கப் பாதைத் திட்டத்திலும் ஊழல் நடந்திருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அந்த திட்டத்துடன் தொடர்புடைய சில நபர்களை கைது செய்துள்ளது.  இந்நிலையில் கடலுக்கு அடியில் மேற்கொள்ளப்படும் சுரங்கப் பாதை திட்டம் தொடர்பாக லிம் குவாங் எங் தொடர்ந்து பொய்யுரைத்து வருகிறார்.  இதற்காக பினாங்கு மாநில மக்களிடம் குவாங் எங் மன்னிப்பு கோர வேண்டும் என லியாங் தெக் மெங் தெரிவித்தார்.

பினாங்கு மாநில அரசாங்கத்தில் காணப்படும் பலவீனங்களை மாநில மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய தருணமிது என குறிப்பிட்ட லியாங் தெக் மெங் வரும் பொதுத் தேர்தலில் பினாங்கு மக்கள் மாற்றத்துக்கு தயாராக வேண்டும் என கேட்டு கொண்டார்.