புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஸ்பீம் திட்டத்தில் ஆண்டுக்கு வெ.250 ஊக்குவிப்பு நிதி! ஈ.பி.எப் வாரியம் தகவல்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஸ்பீம் திட்டத்தில் ஆண்டுக்கு வெ.250 ஊக்குவிப்பு நிதி! ஈ.பி.எப் வாரியம் தகவல்

காஜாங், பிப்.8-
பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கடந்தாண்டு அறிவித்த ஒரே மலேசியா ஓய்வூதிய திட்டத்தின் (ஸ்பீம்) கீழ் ஆண்டுக்கு குறைந்தது 1,667 வெள்ளியைச் சேமித்திருக்கும் சொந்த தொழில் புரிபவர்கள், குடும்ப மாதர்கள், விவசாயிகள், இரவு சந்தை வர்த்தகர்கள், டாக்சி, ஊபர் மற்றும் கிரேப் ஓட்டுநர்கள் முதலானோருக்கு 250 வெள்ளி ஊக்குவிப்பு நிதி வழங்கப்படுவதாக ஊழியர் சேமநிதி வாரியம் (ஈ.பி.எப்) தெரிவித்தது.

இது குறித்து ஊழியர் சேமநிதி வாரியத்திலுள்ள ஆலோசகரான லெட்டா கருணாகரன் கூறுகையில், சொந்த தொழில் புரிபவர்கள், நிலையான வருமானத்தைக் கொண்டிருக்காதவர்கள் தங்களது பணி ஓய்வு வயதில் சேமிப்பைக் கொண்டிருக்கும் நோக்கில் இந்த திட்டத்தை அரசாங்கம் கடந்தாண்டு அறிவித்ததாக தெரிவித்தார்.

இந்த திட்டம் கடந்த ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய தரப்பினர்கள் தங்களது ஆற்றலுக்கு ஏற்ப தன்னார்வ அடிப்படையில் சேமிப்பதற்கு இந்த திட்டம் ஊக்குவிக்கின்றது. குறிப்பாக, ஊழியர் சேமநிதியின் வழி சொந்த தொழில் புரிபவர்கள் சேமிப்பு பழக்கத்தினைக் கொண்டிருக்கவும் அவர்களது பணி ஓய்வு வயதில் குறிப்பிட்ட சேமிப்பைக் கொண்டிருக்கவும் சமூகநலத் துறையை மட்டுமே சார்ந்திருக்கும் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள், மீனவர்கள், டாக்சி ஓட்டுநர்கள், குழந்தைகளை பராமரிப்பவர்கள், காப்புறுதி மற்றும் சொத்துடைமை முகவர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், பாடக பாடகிகள், நடிகர்கள், உடல் கட்டமைப்பு ஆலோசகர்கள், பேச்சாளர்கள், வர்த்தக உரிமையாளர்கள் (தனிநபர் / கூட்டுத்தொழில்), இணையத்தள வர்த்தகர்கள், சொந்தமாக செயல்படும் கணக்காய்வாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், குடும்ப மாதர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களும் பெறாத தொழிலாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர்கள் இந்த திட்டத்தில் சேமிக்க முடியுமென காஜாங் வட்டாரத்திலுள்ள இந்திய டாக்சி ஓட்டுநர்களுக்கு ஒரே மலேசியா ஓய்வூதிய திட்டம் குறித்து விளக்கம் அளித்த போது லெட்டா கருணாகரன் மேற்கண்ட தகவலை வழங்கினார்.

இந்த திட்டத்தில் இணைவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் மலேசிய பிரஜைகளாகவும் ஊழியர் சேமநிதி வாரியத்தில் உறுப்பினர்களாகவும் சொந்த தொழில் செய்பவர்களாகவும் ஊழியர் சேமநிதி வாரியத்தின் 16ஜி (1எம்) எனும் ஒரே மலேசியா ஓய்வூதிய திட்டத்தைத் தேர்தெடுத்தவர்களாக இருக்க வேண்டும். நிரந்தர வருமானத்தைக் கொண்டிருப்பவர்கள் அல்லது தொழிலாளர்களாக இருப்பவர்கள் இந்த திட்டத்தில் இணைய முடியாது.
ஒரே மலேசியா ஓய்வூதிய திட்டத்தின் 16ஜி பாரத்தை முதலில் பூர்த்தி செய்து நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின் தகுதியை அத்தரப்பினர்கள் கொண்டிருக்க வேண்டும்.  இந்த திட்டத்தில் இணைவதற்கான ஸ்பீம் பாரத்தை ஊழியர் சேமநிதி வாரியத்தின் அலுவலகங்களிலும் அந்த வாரியத்தின் www.kwsp.gov.my அகப்பக்கத்திலும் பெற முடியும். பூர்த்தி செய்யப்பட்ட பாரங்களை அந்த வாரியத்தின் அலுவலகங்களிலும் அல்லது மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைக்க முடியும்.

மாதாந்திரம் சேமிக்க நினைக்கும் தரப்பினர் ஸ்பீம் திட்டத்திற்கான KWSP 6A(2) பாரங்களைப் பூர்த்தி செய்து தொகையாகவும் காசோலைகள் வாயிலாகமும் ஊழியர் சேமநிதி வாரியத்தின் அலுவலகங்களிலும் வழங்கலாம். அதுமட்டுமின்றி, இந்த திட்டத்தின் கீழ் நியமினம் செய்யப்பட்டுள்ள ஆர்.எச்.பி, மே பேங்க், பப்ளிக் பேங்க், பி.எஸ்.என். ஆகிய வங்கிகளில் தொகையை செலுத்தலாம். இதைத் தவிர, மே பேங்க் மற்றும் பப்ளிக் பேங்க் ஆகிய வங்கிகளின் இணையத்தள வங்கி சேவையின் வாயிலாகவும் செலுத்த முடியும். இந்த திட்டத்தின் கீழ் மாதத்திற்கு குறைந்தது 50 வெள்ளியும் வருடத்திற்கு குறைந்தது 60 ஆயிரம் வெள்ளியை சேமிக்கலாம். இந்த திட்டத்தில் இணையும் உறுப்பினர்களுக்கு வருடாந்திர இலாப ஈவு அவர்களின் 100 வயது வரையில் வழங்கப்படும்.

அரசாங்கம் இந்த திட்டத்தின் கீழ் 1,667 வெள்ளி வரையில் சேமிக்கின்றவர்களுக்கு குறைந்தது 250 வெள்ளி ஊக்க நிதியை வழங்கும். இருப்பினும், இதைவிட குறைவாக சேமிக்கின்றவர்களுக்கு அவர்களின் சேமிப்பில் 15 விழுக்காடு ஊக்கநிதியை அரசாங்கம் வழங்கும். அதனால், இந்த அருமையான திட்டத்தில் இந்திய சமூகத்தினர் பங்கேற்று தங்களின் சேமிப்புகளை அதிகரித்து நன்மையடைய வேண்டுமென லெட்டா கருணாகரன் கேட்டுகொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன