கப்பாளா பத்தாஸ், ஜூலை 25-

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் எந்த தரப்பினரையும் சந்திப்பதற்கு தேசிய முன்னணி தயாராக இருப்பதாக அம்னோவின் இளைஞர் பிரிவு தலைவரும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

ஜ.செ.க.விற்கும், ஆர்.ஓ.எஸ். எனப்படும் சங்கங்களின் பதிவு இலாகாவிற்கும் இடையில்  ஏற்பட்டுள்ள மோதல் அக்கட்சியை ரத்து செய்வதற்கு தேசிய முன்னணி கையாண்டு வரும் ஒரு சூழ்ச்சி என கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

தேசிய முன்னணி வெற்றிக்காக எந்த கட்சியின் பதிவையும் ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே, அக்குற்றச்சாட்டிற்கும் தேசிய முன்னணிக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. ஜ.செ.க தேர்தலில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக இந்த பிரச்னை எழுந்துள்ளது. எனவே, ஜ.செ.கவை எதிர்க்க துணிவில்லாமல் அக்கட்சியை ரத்து செய்யும் நடவடிக்கையில் தேசிய முன்னணி இறங்கியுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சிறிதும் உண்மையில்லை என நேற்று கப்பாளா பத்தாஸ் அம்னோ தொகுதி பேராளர் கூட்டத்தைத் தொடக்கி வைத்தபோது  அவர் கூறினார்.

அம்னோ உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆர்.ஓ.எஸ்.ஸின் விதிமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். நாட்டை ஆட்சிப் புரிந்து வரும் அம்னோகூட முன்பு இதே நிலைமையை எதிர்நோக்கியதோடு இறுதியில் அக்கட்சி ரத்து செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஜ.செ.க ரத்து செய்யப்பட வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் அவ்வாறு எல்லாம் அரசியல் நடத்த மாட்டோம். அக்கட்சி ரத்து செய்யப்பட்டால் அக்கட்சிக்கே அதிக அனுதாபங்கள் ஏற்படும். ஆர்.ஓ.எஸ். எடுத்த முடிவை ஜ.செ.க மதிக்க வேண்டும். மாறாக, அதனை ஒரு சர்ச்சையாகப் பார்க்கக் கூடாது  என கைரி ஜமாலுடின் குறிப்பிட்டார்.