தைப்பிங், ஜூலை 25-

வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது இந்தியர்களின் கடமையாகுமென பேரா மந்திரி புசார் செயலாளரின் சிறப்பு அதிகாரியும், தைப்பிங் தொகுதி ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவருமான வீரன் தெரிவித்தார்.

இந்தியர்களின் மேம்பாட்டிற்கும் உழைக்கும் ஒரே கட்சி ம.இ.கா.தான். அதேபோல் இந்திய சமுதாயத்திற்கு பிரச்னை என்றாலும் நாம்தான் முன்வரிசையில் நிற்கின்றோம். இதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென ம.இ.கா. தைப்பிங் தொகுதியில் 24ஆவது இளைஞர் பிரிவு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

மத்திய அரசில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் மட்டுமே நம்மால், பல்வேறான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அதோடு சட்டமன்ற மற்றும் நாடாளுமென்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் மானியங்களைக் கொண்டு, மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமென வீரன் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் மலேசிய இந்தியர்களை பிரதிநிதிக்க பல்வேறு அரசியல் கட்சிகள் உதயமாகிவிட்டன. ஆனால் இவை அனைத்திற்கும் தாய்க்கட்சி ம.இ.கா.தான். அதோடு கால மாற்றத்தில் பல கட்சிகள் காணாமல் போகலாம். ஆனால் இந்தியர்களின் பிரதிநிதியான ம.இ.கா. என்றும் நிலைத்து நிற்கும்.

நமக்கான பிரதிநிதித்தும் மத்திய அரசில் இருந்தால்தான் நமக்கான தேவைகளை கேட்டு பெற்றுக் கொள்ளலாம். பிரதிநிதித்துவம் இல்லாது போனால், அனைத்து நிலைகளிலும் நமக்கான சிறப்பு சலுகைகளை இழந்து விடுவோம் என வீரன் எச்சரித்தார்.  14ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது. இந்நிலையில் அனைவரும் ம.இ.கா. வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். அதோடு நமது வேட்பாளர்கள் வெற்றி பெற கடுமையாக உழைக்கவும் இளைஞர்கள் தயாராக வேண்டுமென வீரன் கோரிக்கை விடுத்தார்.