முகப்பு > மற்றவை > பணிப்பெண் சித்ரவதை: விசாரணை அறிக்கை முழுமைப்படுத்தப்படும்! போலீஸ்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பணிப்பெண் சித்ரவதை: விசாரணை அறிக்கை முழுமைப்படுத்தப்படும்! போலீஸ்

புக்கிட் மெர்தாஜாம், பிப். 13-
தாமான் கோத்தா பெர்மாய் இரண்டில் தனது முதலாளிமார்களால் இந்தோனேசிய பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்டு மரணமடைந்தது தொடர்பில் போலீஸ் விசாரணை அறிக்கையை முழுமைப்படுத்தி வருவதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஏ.தெய்வீகன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் வெகு விரைவில் முடிக்கப்படும் என நம்பப்படுவதாகவும் 36 முதல் 60 வயதிற்குட்பட்ட 3 பேரை போலீஸ் கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், இச்சம்பவம் தொடர்பில் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அண்டை வீட்டார், மருத்துவர் உட்பட கிட்டத்தட்ட 15 பேரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இத்தகவலை வெளியிட்டார்.

சித்ரவதை செய்யப்பட்ட அடெனினா லிசியோ (வயது 28) எனும் அந்தப் பணிப்பெண்ணின் தலை மற்றும் முகம் வீங்கியிருந்ததோடு கை மற்றும் கால்களில் சீழ் வடிந்திருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில் பொது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அந்தப் பெண்ணை கண்டுப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதற்கு காரணமான உடன்பிறப்புகள் இருவரை கைது செய்தனர்.

தற்போது போலீஸ் சவப்பரிசோதனை அறிக்கைகாக காத்திருப்பதாகவும், அதன் மூலம் அப்பெண் எத்தனை நாட்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வரும் என தெய்வீகன் குறிப்பிட்டார். இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த அண்டை அயலார்கள் போலீஸ் விசாரணைக்கு உதவ வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

விசாரணைக்கு உதவு பொருட்டு கைது செய்யப்பட்ட உடன்பிறப்புகளின் தாயாரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 60 வயது மாது 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். அம்மாது இன்று புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டார். இதற்கு முன்னர் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட உடன்பிறப்புகள் இருவருக்கும் இன்றுடன் தடுப்பு காவல் முடிவடைகிறதாகவும் தொடர் விசாரணைக்குப் பின்னர் தடுப்பு காவல் நீட்டிக்கப்படலாம் என தெய்வீகன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன