புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > வசந்தபிரியா விவகாரம்: துணைக்கல்வியமைச்சர் கமலநாதன் மீது குடும்பத்தினர் போலீசில் புகார்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

வசந்தபிரியா விவகாரம்: துணைக்கல்வியமைச்சர் கமலநாதன் மீது குடும்பத்தினர் போலீசில் புகார்!

கோலாலம்பூர், பிப். 13-

அண்மையில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த மாணவி எம்.வசந்தபிரியா விவகாரத்தில் போலியான அறிக்கையை வெளியிட்டதாக துணைக்கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதன் மீது வசந்தபிரியாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

கமலநாதனைத் தவிர்த்து வசந்தபிரியாவின் தந்தை ஆர்.முனியாண்டி (வயது 54) நியூ ஸ்ரைட்ஸ் டைம்ஸ் மற்றும் பெரித்தா ஹரியான்  ஆகிய நாளிதழ்கள் மீதும் போலீசில் புகார் அளித்தார். வசந்தபிரியாதான் ஆசிரியையின் கைப்பேசியைத் திருடியதாக காட்டும் சிசிடிவி காமேரா பதிவு இருப்பதை போலீஸ் உறுதி செய்திருப்பதாக அந்நாளேடுகள் செய்திகளை வெளியிட்டதைத் தொடர்ந்து அவற்றின் மீது செபெராங் பிராய் செலாத்தான் மாவட்ட போலீஸ் நிலையத்தில் அவர் புகாரை அளித்தார்.

இது குறித்து முனியாண்டி கூறுகையில், உண்மையில்லாத தகவல் தொடர்பில் கமலநாதன் அவசரமாக அறிக்கையை வெளியிட்டதற்கான நோக்கம்தான் என்ன? அவரது அறிக்கை போலீஸ் மேற்கொண்டுவரும் விசாரணையில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்தார்.

அதோடு, அவரது அறிக்கையானது சம்பந்தப்பட்ட ஆசிரியையை இந்த விவகாரத்தில் பாதுகாப்பதற்கான முயற்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார். என் மகள் தற்கொலை செய்ய முயன்றதற்கான பதிவுகள் இருப்பதாக கமலநாதன் கூறியதைத் தொடர்ந்து அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளேன். மேலும், என் மகளின் மரணம் தொடர்பில் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது தவறு இல்லை என அவர் கூறியிருப்பதாகவும் அவர் சொன்னார்.

இதற்கு முன்னர் வசந்தபிரியா தனது கையின் மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருந்ததாகவும் அவர் மனநல ஆலோசனை நிபுணரின் சேவையைப் பெற வேண்டுமென அவரது குடும்பத்தினர்கள் ஆலோசனை வழங்கியிருந்ததாகவும் கமலநாதன் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தது. ஆயினும், இந்த குற்றச்சாட்டை வசந்தபிரியாவின் தந்தை முனியாண்டி திட்டவட்டமாக மறுத்தார். கமலநாதன் கூறியது போல் தனது மகள் மன அழுத்தத்திற்கு ஆளானதில்லை என்றும் அவரது அறிக்கை குழப்பங்கள் நிறைந்ததாகவும் பள்ளிக்கு ஆதரவாகவும் இருப்பதாக அவர் கூறினார்.

மற்றொரு போலீஸ் புகாரில் போலீஸ் என்.எஸ்.டி. மற்றும் பெரித்தா ஹரியான் நாளிதழ்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் தொடர்பிலும் விசாரணையை நடத்த வேண்டுமென முனியாண்டி வலியுறுத்தினார்.

ஆசிரியையின் கைப்பேசியை வசந்தபிரியாதான் திருடினார் என்பதற்கான சிசிடிவி காமேரா பதிவு இருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஏ.தெய்வீகன் அதனைத் திட்டவட்டமாக மறுத்தார்.

சம்பந்தப்பட்ட காணொளி பதிவு தெளிவற்றதாக இருப்பதால் உண்மையான திருடனைக் கண்டுப்பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் தற்போது தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியைப் போலீஸ் நாடியிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன