பெட்டாலிங் ஜெயா, பிப்.13-

தாரணியைக் கொலை செய்ததாக பாதுகாவலரான  எம்.குணசேகரன் (வயது 37) மீது இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

அவர் மீதான இக்குற்றச்சாட்டு மாஜிஸ்திரேட் நூர் அரிஃபின் ஹிஷாம் முன்னிலையில் வாசிக்கப்பட்டது.  இருப்பினும், அவரிடம் வாக்குமூலங்கள் ஏதும் பெறப்படவில்லை. குற்றவாளி கூண்டில் வெள்ளை நிறத்திலான டி-சட்டையை அணிந்திருந்த அவர் தலை குணிந்து நின்றபடி இருந்தார். தன் மீதான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர் தலையை மட்டும் அசைத்தார்.

கோத்தா டாமன்சாராவிலுள்ள பேரங்காடியில் கடந்த 5ஆம் தேதி மாலை மணி 1.50 அளவில் தாரணியைக் கொன்றதாக குணசேகரன் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவியல் சட்டவிதி 302இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கட்டாயம் மரணத் தண்டனையை விதிக்கவும் வகை செய்கின்றது.

அரசு தரப்பில் டிபிபி ஃபாஸிடா ஃபைக் ஆஜரான வேளையில் குணசேகரன் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. வருகின்ற ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரப்படவுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்த தாரணி கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டு உயிரிழந்தார். அவரைத் தாம்தான் கொன்றதாக குணசேகரன் போலீசில் சரணடைந்ததோடு அவரது சடலம் காரினுள் இருப்பதாகவும் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.