புதன்கிழமை, ஏப்ரல் 24, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > விளையாட்டு > மெஸ்சி குறைவான ஆட்டங்களில் விளையாட வேண்டும்!
விளையாட்டு

மெஸ்சி குறைவான ஆட்டங்களில் விளையாட வேண்டும்!

பார்சிலோனா, பிப்.14 –

2018 உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் பார்சிலோனாவின் உச்ச நட்சத்திரம் லியோனெல் மெஸ்சி குறைவான ஆட்டங்களில் விளையாட வேண்டும் என அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் எதிர்பார்க்கிறது.

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு மெஸ்சி சிறந்த உடல் தகுதியில் இருப்பதை உறுதிச் செய்வதற்காக அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் பார்சிலோனா கிளப்பிடம் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளதாக அதன் தலைவர் கிலாவ்டியோ தாப்பியா தெரிவித்துள்ளார்.

இந்த பருவத்தில் பார்சிலோனா அணி களம் கண்ட 39 ஆட்டங்களில் மெஸ்சி, 33 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி நடந்த எஸ்பான்யாலோக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மெஸ்சி முதன்மை அணியில் இடம்பெறவில்லை.எனினும் இரண்டாம் பாதியில் மாற்று ஆட்டக்காரராக நுழைந்தார்.

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்ஜெண்டினா சிறந்த அடைவுநிலையை வெளிப்படுத்த இலக்கு கொண்டுள்ளது. அதற்கான தயார்நிலைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக கிலாவ்டியோ கூறினார். மென்செஸ்டர் சிட்டியில் செர்ஜியோ அகுவேரோ சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதேவேளையில் மெஸ்சியும் தொடர்ந்து அதிரடி படைக்கிறார். இவர்கள் இருவரைத் தவிர இதர ஆட்டக்காரர்களின் ஆட்டத்தரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக கிலாவ்டியோ கூறினார்.

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு முன்பாக அர்ஜெண்டினா, கத்தாலோனியா அணியுடன் நட்புமுறை ஆட்டத்தில் பங்கேற்கவுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்ஜெர்ண்டினா இறுதி ஆட்டத்தில் 0 – 1 என்ற கோலில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன