கோலாலம்பூர், பிப்.14 – 

நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலில் 46 நாடாளுமன்றத் தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் என உள்ளூர் நாளேடான பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 29 தொகுதிகளில் கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வென்ற தொகுதிகளாகும்.

 இந்த தொகுதிகளில் கடந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் மூவாயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருப்பதால் வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் கடும் போட்டியை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய முன்னணியின் 29 தொகுதிகளில் மூன்று தொகுதிகள் அமைச்சர்களின் தொகுதிகளாகும்.  பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சஹிடான் கசிம் ( ஆராவ் ) வெறும் ஆயிரத்தும் 371 வாக்குகளைப் பெற்ற வேளையில் ஜெராய் தொகுதியில்   டத்தோஸ்ரீ ஜாமில் கிர் பஹரோம், ஆயிரத்து 196 வாக்குகளையும்,  டான்ஸ்ரீ ஜோசேப் குரூப் ( பென்சியாங்கான் ) ஆயிரத்து 744 வாக்குகளையும் பெற்றனர்.

இவர்களைத் தவிர, தோட்டத் தொழில் மூலப் பொருள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ மா சியூ கியோங் ( தெலுக் இந்தான் ), போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஸ்ரீ லியான் தியோங் லாய் ( பெந்தோங் ) , கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ( பெரா ), இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி ( தித்திவங்சா ), சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் ( சிகாமாட் ),  எரிசக்தி, பசுமை தொழில்நுட்பம், நீர்வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ மக்சிமூஸ் ஜோனிட்டி ஒங்கிலி ( கோத்தா மருடு ) ஆகியோரின் தொகுதிகளும் ஆபத்தான தொகுதிகளாக கருதப்படுகின்றன.

ம.சீ.ச தலைவரான டத்தோ ஸ்ரீ லியாவ் கடந்த பொதுத் தேர்தலில் பெந்தோங் தொகுதிகளில் வெறும் 379 வாக்குகளில் மட்டுமே வெற்றி பெற்றார். அதேவேளையில் மா சியூ கியோங், கடந்த 2014 ஆம் ஆண்டில் நடந்த இடைத் தேர்தலில் 238 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார்.

சபா ஒற்றுமை கட்சியின் இடைக்கால தலைவரான டத்தோ ஸ்ரீ மக்சிமுஸ் கடந்த பொதுத் தேர்தலில் 842 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனினும் இம்முறை பென்சியாங்கான் சட்டமன்றத் தொகுதியில் அவர் போட்டியிடக்கூடும் என கணிக்கப்படுகிறது.

இவர்களைத் தவிர ஏழு துணை அமைச்சர்களின் தொகுதிகளும் கடுமையான போட்டியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கிராமப்புற, வட்டார மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ அஹ்மாட் ஜஸ்லான் யாக்கோப் ( மாச்சாங் ),  சுகாதார துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ  டாக்டர் ஹில்மி யாஹ்யா ( பாலிக் பூலாவ் ) , அனைத்துலக வாணிப , தொழில்துறை துணை அமைச்சர் டத்தோ சுவா தீ யோங் ( லாபிஸ் ),  சுற்றுச் சூழல் மற்றும் இயற்கைவள துணை அமைச்சர் டத்தோ ஹமிம் சமுரி ( லெடாங் ),  பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ  ரசாலி இப்ராஹிம் ( மூவார் ), மகளிர் , குடும்ப , சமூகநல மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ அசிசா முஹமட் டுன் ( பியூபோர்ட்) , விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை துணை அமைச்சர் நோகே அனாக் கும்பேக் ( மாஸ் காடிங் ) ஆகியோரும் கடும் போட்டியை எதிர்நோக்கவிருக்கின்றனர்.

இவைத் தவிர, தேசிய முன்னணி மூவாயிரத்துக்கும் குறைவான வாக்குகளில் வெற்றி பெற்ற பென்டாங், சிக், கூலிம் பண்டார் பாரு, கெத்தேரே, பாகான் செராய், கேமரன் ம்லை, சபாக் பெர்ணாம், கோல சிலாங்கூர், பாசீர் கூடாங், தெப்ராவ், சராத்தோ, பாராம்  ஆகிய தொகுதிகளும் ஆபத்தான தொகுதிகளாக கருதப்படுகின்றன.

எதிர்கட்சிகள் பொறுத்தமட்டில், பாஸ் கட்சியின் ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் கடும் போட்டியை சந்திக்கவிருக்கின்றன. பாஸ் கட்சியின் உதவித் தலைவர் இட்ரிஸ் அஹ்மாட் கடந்த பொதுத் தேர்தலில் புக்கிட் கந்தாங் தொகுதியில் 986 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய முன்னணியின் டத்தோ இஸ்மாயில் சாபியானை வீழ்த்தினார்.

அதேவேளையில் பாஸ் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ டாக்டர் முமஹட் கைரூடின் குவால் நெருஸ் தொகுதியில் கடும் போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் நசாருடின் ஹசான், கிளந்தானில் பாதுகாப்பான தொகுதியைத் தேடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த பொதுத் தேர்தலில் நசாருடின், பகாங்கின் தெமேர்லோ தொகுதியில் அப்போதைய தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ சைபூடின் அப்துல்லாவை ஆயிரத்தும் 70 வாக்குகளில் தோற்கடித்தார்.

இவைத் தவிர அமானா கட்சியின் கோலா கிராய், சிப்பாங்,  பி.கே.ஆர் கட்சியின் சுங்கை சிப்புட், லெம்பா பந்தாய், பத்து பஹாட், மிரி,  ஜனநாயக செயல்கட்சியின் ரவூப், சண்டாக்கான், சரிக்கேய், சிபுவும் ஆபத்தான தொகுதிகளாக கருதப்படுகின்றன.