புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஃபொரெக்ஸ்கில் வெ.100 கோடி மோசடி: இரண்டு இந்தியர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சமூகம்முதன்மைச் செய்திகள்

ஃபொரெக்ஸ்கில் வெ.100 கோடி மோசடி: இரண்டு இந்தியர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கோலாலம்பூர், பிப்.14-

அந்நிய செலாவணி முதலீட்டு மோசடித் திட்டத்தில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இரண்டு இந்திய டத்தோ அந்தஸ்தை கொண்டவர்கள் தேடப்படுவதாக போலீஸ் அறிவித்துள்ளது. அவர்கள் டத்தோ பாண்டியன் மருதமுத்து (வயது 55) மற்றும் அவருடைய மனைவி டத்தின் கௌரி பாஸ்குனி (வயது 56) என்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர் என்று வர்த்தகக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோஸ்ரீ அமார் சிங் தெரிவித்தார்.

மக்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து அவர்களுக்கு 12 விழுக்காடு இலாப ஈவு தருவதாகக் கூறி ஏமாற்றியதன் தொடர்பில் இவர்கள் தேடப்படுவதாக அவர் கூறினார். அதோடு இவர்கள் இருவரும் மலேசியாவை விட்டு வெளியேறி விட்டதாகவும் டத்தோஸ்ரீ அமார் சிங் செய்தியாளர்களிடம் கூறினார்.

இவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால், பொதுமக்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் புகார் செய்யலாம் எனக் கூறிய அவர், இதில் சம்பந்தப் பட்டுள்ளதாக நம்பப்படும் மூன்று டத்தோக்களை வர்த்தகக் குற்றத் தடுப்புப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளதையும் உறுதிப்படுத்தினார்.

சுமார்35 வயதுக்கும் 49 வயதுக்கும் உட்பட்ட அந்த மூவர் கைது செய்யப்பட்டதோடு, 13 ஆடம்பரக் கார்கள், மூன்று ‘சூப்பர் பைக் மோட்டார் சைக்கிள்கள், 10 தங்கக் கட்டிகள், விலையுயர்ந்த கடிகாரங்கள் ஆகியவை கைப்பற்றப் பட்டுள்ளன.

2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முதலீட்டு திட்டத்தில் சுமார் 100 கோடி ரிங்கிட் சம்பந்தப்பட்டுள்ளது. இந்த மோசடிகள் தொடர்பில் இவர்களுக்கு எதிராக 116 போலீஸ் புகார்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவர்களுடன் சம்பந்தப்பட்ட இதர 17 பேரின் வங்கிக் கணக்குகள் உள்பட 38 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதையும் டத்தோஸ்ரீ அமார் சிங் செய்தியாளர்களின் பார்வைக்குக் கொண்டு வந்தார். கைது செய்யப்பட்டவர்கள் 1959ஆம் ஆண்டின் குற்றத் தடுப்புச் சட்டம் ‘பொகாவின் கீழ் கைது செய்யபட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன