சாம்பியன்ஸ் லீக் — கோல் மழைப் பொழிந்தது லிவர்புல்!

0
8

போர்ட்டோ, பிப்.15-

சாம்பியன்ஸ் லீக் எனப்படும் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்றின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தின் லிவர்புல் 5 – 0 என்ற கோல்களில் போர்ச்சுகலின் எப்.சி போர்ட்டோ அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் லிவர்புல், சாம்பியன்ஸ் லீக் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் தனது வாய்ப்பை உறுதிச் செய்துள்ளது. எப்.சி போர்ட்டோவுக்கு எதிரான ஆட்டத்தில் லிவர்புலின் சாடியோ மானே மூன்று கோல்களைப் போட்டு ஹாட்ரீக் சாதனையைப் படைத்துள்ளார்.

லிவர்புலின் முதல் கோலை 25 ஆவது நிமிடத்தில் சாடியோ மானே போட்டார். நான்கு நிமிடங்களுக்குப் பின்னர் முஹமட் சாலா கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார்.. இரண்டாம் பாதி ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் சாடியோ மானே மூன்றாவது கோலைப் போட்ட வேளையில் 73 ஆவது நிமிடத்தில் ரோபேர்ட்டோ பிர்மின்ஹோ நான்காவது கோலைப் புகுத்தினார்.

ஆட்டம் முடிவடைய ஐந்து நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது சாடியோ மானே ஐந்தாவது கோலைப் போட்டு லிவர்புலின் மிகப் பெரிய வெற்றியை உறுதிச் செய்தார். இரண்டாம் கட்ட ஆட்டம் மார்ச் 6 ஆம் தேதி அன்பீல்ட் அரங்கில் நடைபெறவுள்ள வேளையில் லிவர்புல் காலிறுதி ஆட்ட வாய்ப்பை கிட்டத் தட்ட உறுதி செய்து விட்டது.