முகப்பு > சமூகம் > சுங்கை சிப்புட் இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவை உதயமானது!!
சமூகம்முதன்மைச் செய்திகள்

சுங்கை சிப்புட் இந்திய இயக்கங்களின் ஒருங்கிணைப்புப் பேரவை உதயமானது!!

சுங்கை சுப்புட், பிப். 16-
சுங்கை சிப்புட் மாவட்டத்தில் இயங்கி வரும் 60க்கும் மேற்பட்ட இந்திய இயக்கங்கள் ஒரே குடையின் கீழ் செயல்படும் வண்ணம் ஒருங்கிணைப்புப் பேரவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அண்மையில் சுங்கை சிப்புட்டில் அமைந்துள்ள சீன உணவகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு சாரா இயக்கங்களுக்கான சந்திப்புக் கூட்டத்தில் இந்த உடன்பாடு காணப்பட்டது.
மலேசியாவைப் பொருத்தமட்டில் இந்தியர்கள் மூன்றாவது பெரிய இனம் என்கின்ற போதிலும், அதிகமான கட்சிகளாலும் இயக்கங்களாலும் ஒற்றுமையின்றி பிளவுபட்ட சமுதாயமாக வாழ்கிறோம். கட்சிகளும் இயக்கங்களும் எண்ணிக்கையில் அதிகம் என்றாலும், அவ்வனைத்தின் நோக்கமும் குறிக்கோளும் இந்தியச் சமூகத்தின் மேம்பாடன்றி வேறொன்றுமில்லை.
எனவே, தனித்தனியாகப் பிரிந்து இந்தியச் சமூகத்தின் வளப்பத்திற்காகப் போராடுவதைவிட, ஒருமித்த குரலாகச் செயல்படுவது அதிகமான நன்மையைப் பயக்கும் என்று பேரா மாநில மஇகா இளைஞர் பகுதித் தலைவரும் சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பகுதித் தலைவரும் ஒருங்கிணைப்புப் பேரவையின் துணைத் தலைவருமான நேருஜி முனியாண்டி தெரிவித்தார்.
இந்த ஒருங்கிணைப்புப் பேரவையின் மூலம் சுங்கை சிப்புட் இந்தியர்களின் வாழ்வாதார முன்னேற்றதிற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக, பேரவையின் துணைத் தலைவராகத் தாம் தேர்வுபெற்றது, தம் மீதும் சுங்கை சிப்புட் இளைஞர்கள் மீதும் மக்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையைப் புலப்படுத்துவதாக நேருஜி கூறினார். இந்த நம்பிக்கையைத் தொடர்ந்து நிலைநாட்டுவதற்குத் தாம் முழுமூச்சாகச் செயல்படவிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன