தஞ்சோங் மாலிம் ஜூலை 26 – 
மலேசிய பிரீமியர் லீக்கில் களம் கண்டுள்ள முதல் இந்தியர் அணியான மிஃபா அணி  குவந்தான் எப்.ஏ அணியுடனான ஆட்டத்தில் 6-3 என்ற கோல்கணக்கில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி முக்கியமானது. மேலும் நமது அணி பிரீமியர் லீக்கில் நிலைத்திருக்க வரவிருக்கும் ஆட்டங்கள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில்  நமது அணியின் ஆட்டக்காரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு வித்திடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதென அணியின் வெற்றி குறித்தும், அதன் நிலை குறித்தும் வினவியமைக்கு மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.
தஞ்சோங் மாலிம் புரோட்டான் திடலில் நடைபெற்ற ஆட்டத்தில் நமது அணியினர் மிகச்சிறப்பாக விளையாடினர். நமது ஆட்டக்காரர்களின் அதிரடியினை தாக்கு பிடிக்க முடியாமல் குவந்தான் வீரர்கள் திணறினர் என்றே சொல்லலாம்.  முற்பாதி ஆட்டத்தில் நமது அணி 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில்  பிற்பாதி ஆட்டத்தில் 2 கோல்களும் புகுத்தப்பட்டன. நமது அணியின் சார்பில்  நந்தகுமார், தினகரன் முத்தையா, லூயிஸ், ஜேப்பில்  ஆகியோர் தலா 1 கோலும் ஷெர்மன் 2 கோலும் அடித்தனர். 
நமது அணியை பொறுத்தவரையில் பல சிக்கல்கள் கடந்து பிரீமியர் லீக்கில் நிலைத்திருக்க போராடி வருகிறது. அதனைத்தொடர்ந்து இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் ஒவ்வொரு வெற்றியும் நமக்கு இன்றியமையாததாக கருதப்படுகிறது. நமது சமுதாய பெருமக்கள் நமது அணி வீரர்களுக்கு ஆதரவளிக்கவும், ஊக்கமளிக்கவும் ஆட்டம் நடைபெறும் இடங்களில் திரள வேண்டும்.
நமது வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் பட்சத்தில் இன்னும் சிறப்பாக விளையாடுவார்கள் என்பது உறுதி. வெற்றி பெறுவோம் பிரீமியர் லீக்கில் நிலைத்திருப்போம்.