கோம்பாக், பிப் 18-
பத்து கேவ்ஸ், தாமான் செலாயாங்கிலுள்ள மளிகை கடையின் முன்புறம் நிகழ்ந்த கைகலப்பில் தன்னுடன் பணிப்புரியும் சக பணியாளரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு இந்திய பிரஜை தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இச்சம்பவம் இன்று பின்னிரவு மணி 12.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சுமார் 30 வயதுடைய அந்நபர் 50 வயதுடைய சக நாட்டு பிரஜையை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இவர்களிடையே ஏற்பட்ட சண்டையை தடுக்க முயன்ற மலேசியரான அந்த மளிகை கடையின் உரிமையாளரும் இதில் காயமடைந்துள்ளார். சக பணியாளரை கத்தியால் குத்திய பின்னர் அந்த ஆடவர் கடைக்குள் சென்று தூக்குப் போட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது.

இந்த இரு இந்திய பிரஜைகளிடையே ஏற்பட்ட இந்தக் கைகலப்பு சம்பவம் தொடர்பில் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் அலி அகமட் தெரிவித்தார். அவ்விருவரின் உடலும் சவப்பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.