லண்டன், பிப். 18-

இங்கிலாந்து எப்.ஏ. கிண்ணப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு மன்செஸ்டர் யுனைடெட் தகுதி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு நடந்த ஆட்டத்தில் ஹெடல்பில்ட்ஸ் அணியை 0-2 என்ற கோல் எண்ணிக்கையில் மன்செஸ்டர் யுனைடெட் வீழ்த்தியது.

ஹெடல்பில்ட்ஸ் அரங்கில் இவ்வாட்டம் நடந்ததால் முழு ஆட்டத்தையும் அவ்வணியே கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. முன்னதாக வரும் புதன்கிழமை பின்னிரவு செவிலா அணியுடன் ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் மன்செஸ்டர் யுனைடெட் களமிறங்குவதால், முன்னணி வரிசையில் நிர்வாகி ஜோஷே மரின்யோ சில மாற்றங்களை செய்திருந்தார்.

குறிப்பாக முன்னணி மத்திய திடல் ஆட்டக்காரரான பௌல் பொக்பா உடல் நலக்குறைவு காரணமாக ஆட்டத்தில் களமிறங்கவில்லை என மன்செஸ்டர் யுனைடெட் அதிகாரப்பூர்வ இணையத்தளம் உறுதிப்படுத்தியது. இறுப்பினும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டுமென்பதில் மரின்யோ உறுதியாக இருந்தார். ஆட்டம் தொடங்கிய 3ஆவது நிமிடத்தில் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கான கோலை லுக்காக்கூ புகுத்தினார்.

இதனிடையே தற்காப்பு பகுதியை பலமாக வைத்துக் கொண்ட மன்செஸ்டர் யுனைடெட், ஹெடல்பில்ட்ஸ் ஆட்டக்காரர்கள் முன்னெடுத்த அனைத்து தாக்குதல்களை முறியடித்தார்கள். முற்பாதி ஆட்டத்தின் முடிவில் ஜுவான் மாத்தா போட்ட கோலை, வார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நடுவர் நிராகரித்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 0 என்ற கோல் எண்ணிக்கையில் முடிவடைந்தது.

பிற்பாதியிலும் ஹெடல்பில்ட்ஸ் அணி தொடர் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஆனால் அதன் கோல் புகுத்தும் முயற்சிகள் மட்டும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் 55ஆவது நிமிடத்தில் லுக்காக்கூ மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கான 2ஆவது கோலை புகுத்தி தமது அணிக்கான வெற்றியை உறுதி செய்தார்.