கோலாலம்பூர், பிப். 19-

வரும் 14ஆவது பொது தேர்தலில் கேமரன் மலை தொகுதியில் மஇகா தான் போட்டியிடும் என்பதை மஇகா தலைவர் டாக்டர் சுப்ரமணியம் மீண்டும் உறுதிப்படுத்தினார். முன்னதாக கேமரன் மலை தொகுதியை மைபிபிபி கட்சிக்கு பிரதமர் ஒதுக்கிவிட்டார் என்ற செய்தி வெளிவந்தது குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு டாக்டர் சுப்ரமணியம் மலேசிய சட்டவிதிமுறைப் படி வதந்திகளை பரப்புவதும் அதை நம்புவதும் குற்றமாகும் என கூறியபோது சிரிப்பொலி எழுந்தது. கேமரன் மலை தொகுதியை பொறுத்தவரை மஇகா தான் போட்டியிடும். அதில் அந்த மாற்றமும் இல்லையென அவர் தெரிவித்தார்.

பிரதமர் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியை மாற்றிக் கொள்ளும்படி கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா? என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கு இதர தொகுதிகள் மாற்றம் குறித்து பேசுவதற்கு மஇகா தயாராக இருக்கிறது. ஆனால் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை அங்கு மஇகா மட்டுமே போட்டியிடும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல்  சமர்ப்பிப்பு

14ஆவது தேசிய பொதுத் தேர்தலில் மஇகாவை பிரதிநிதித்து போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.

இதுவரையில் தொகுதி மாற்றங்கள் குறித்து எந்த பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை. மஇகா சமர்ப்பித்த பட்டியலில் பிரதமர் யாரை தேர்ந்தெடுக்கிறாரோ அவரின் பெயரை கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என மஇகா தலைமையகத்தில் நடந்த மத்திய செயலவை கூட்டத்திற்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு கூறினார்.

2 வாரங்களுக்கு முன்பு வேட்பாளர்களின் பெயர் பட்டியல் பிரதமரிடம் வழங்கப்பட்டதாகவும் இதில் 60 விழுக்காடு புதுமுகங்களும் 40 விழுக்காடு பழைய வேட்பாளர்களும் அடங்குவார்கள் என்பதையும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார். பிரதமரிடம் அனுப்பப்பட்டது இறுதி பட்டியல் என்றாலும் மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதையும் அவர் கோடிக்காட்டினார்.

ஹரிமான் ஆறுமுகம் இடைநீக்கம்

 மெர்போக் தொகுதித் தலைவர் அரிமான் ஆறுமுகம் ஒரு ஆண்டிற்கு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக நேற்று கூடிய மத்திய செயலவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. புக்கிட் செலம்பாவ் சட்டமன்ற தொகுதியில் எழுந்துள்ள சர்ச்சையை தொடர்ந்து இந்த முடிவை மத்திய செயலவை எடுத்திருப்பதாக டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் மஇகா தலைமையகம் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர்களுக்கு உறுப்பினர்கள் அனைவரும் பிளவு படாத ஆதரவை வழங்கவேண்டும். அப்படி செயல்பட்டால் மட்டுமே நம்மால் வெற்றி பெற முடியும். அதைவிடுத்து தனித்து செயல்படுவது எந்த வகையிலும் கட்சிக்கு நன்மையை கொண்டு வராது என அவர் தெரிவித்தார்.

தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கி அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கட்சிக்கு களங்கம் விளைவித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

தொகுதி மாற்றம்

கடந்த 13ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினரும் வேறு தொகுதிக்கு மாற்றப்படுவார்களா என்ற கேள்விக்கு வெற்றி பெற்று மக்களின் சேவைக்கு முன்னுரிமை வழங்குபவர்களை ஒரு போதும் மாற்ற மாட்டோம் என டாக்டர் சுப்ரமணியம் கூறினார்.

இந்த மத்திய செயலவை கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி கட்சியின் உதவித் தலைவர்கள், செனட்டர் டத்தோ டி.மோகன், டத்தோ ஜெஸ்பால் சிங், கட்சியின் செயலாளர் டத்தோ சக்திவேல், கட்சியின் தேசிய பொருளாளர் டத்தோஸ்ரீ வேள்பாரி, இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன், கல்வி துறை துணை அமைச்சர் டத்தோ கமலநாதன் உட்பட பெரும்பாலான மத்திய செயலவை உறுப்பினர் கலந்துகொண்டனர்.