ராமேசுவரம், பிப்.21 –

இனி குறை கூறி பலனில்லை, செயலில் இறங்குவோம் என தனது ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமேசுவரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் இல்லத்துக்கு இன்று புதன்கிழமை காலை 7.45 மணியளவில் கமல்ஹாசன் சென்றார். அவரை அப்துல் கலாமின் பேரன் சலீம் நடிகர் வரவேற்று இல்லத்திற்குள் அழைத்துச் சென்றார். அங்கு கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்காயரிடம் கமல்ஹாசன் ஆசி பெற்றார். கலாமின் குடும்பத்தினரிடம் சிறிது நேரம் பேசினார். கலாமின் பேரன் சலீம் அப்துல் கலாம் படம் பொறித்த நினைவு பரிசை கமலுக்கு வழங்கினார்.

கலாம் படித்த பள்ளிக்குச் செல்லும் திட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் கலாம் படித்த மண்டபம் ஒன்றியம் நடுநிலைப்பள்ளியின் முன்பு நின்று காரில் இருந்தபடியே பார்த்துவிட்டு கணேஷ் மஹாலில் மீனவர்களை சந்தித்து பேசுவதற்கு முன்பாக, கலாமின் இல்லத்திற்கு சென்றது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல். அதில், நம் முதல் பணி தன்னார்வ தொண்டர்களை ஒருங்கிணைத்து நாம் எடுத்துக் கொண்ட 8 கிராமங்களை உயர்த்துவது தான்.

இனியும் குறை கூறி பலனில்லை, செயலில் இறங்குவோம். நம் கனவு தமிழ்நாட்டை நாமே உருவாக்குவோம். உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் என்ற ஹாஷ்டாக்கில் இணைத்து டுவிட் செய்யவும் என தனது ரசிரக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு செல்கிறார். வழியில் 3 இடங்களிலும் அவரது இயக்கத்தினர் வரவேற்பு அளிக்கின்றனர். அங்கு கூட்டத்திலும் கமல்ஹாசன் பேசுகிறார்.