சாம்பியன்ஸ் லீக் – கோல் மழையில் நனைந்தது பாயேர்ன் மூனிக்!

0
3

மூனிக், பிப்.21 –

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் இரண்டாவது சுற்றின் முதல் ஆட்டத்தில் பாயேர்ன் மூனிக் 5 – 0 என்ற கோல்களில் துருக்கியின் பெசிக்தாஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் பாயேர்ன் மூனிக்கின் தாமஸ் முல்லர், ரோபேர்ட் லெவென்டோஸ்கி தலா இரண்டு கோல்களைப் போட்டனர்.

ஆட்டம் தொடங்கிய 16 நிமிடங்களில் பெசிக்தாசின் தற்காப்பு ஆட்டக்காரர் டாமோகாஜ் விடாவுக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். முதல் பாதி ஆட்டம் முடிவடையும் தருவாயில் பாயேர்ன் மூனிக்கின் முதல் கோலை தாமஸ் முல்லர் போட்டார்.

இரண்டாம் பாதியில் பாயேர்ன் மூனிக் தனது கோல் வேட்டையைத் தொடர்ந்தது. கிங்ஸ்லி கோமான் இரண்டாவது கோலைப் போட்ட வேளையில், தாமஸ் முல்லர் மூன்றாவது கோலைப் புகுத்தினார். 79 ஆவது நிமிடத்தில் பாயேர்ன் மூனிக்கின் நான்காவது கோலை லெவென்டோஸ்கி போட்டார்.

ஆட்டம் முடிவடையும் தருவாயில் பாயேர்ன் மூனிக்கின் ஐந்தாவது கோலை மீண்டும் லெவென்டோஸ்கி போட்டார். இரண்டாம் கட்ட ஆட்டம் மார்ச் 14 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.