மிலான், பிப்.27 –

இத்தாலி சிரி ஆ லீக் கால்பந்துப் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் நப்போலி 5 – 0 என்ற கோல்களில் கக்லியாரி அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் நப்போலி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டதுடன் இரண்டாவாது இடத்தில் உள்ள யுவன்டஸ் அணியுடனான புள்ளி வேறுபாட்டை நான்காக அதிகரித்துள்ளது.

கடுமையான பனியின் காரணமாக தூரினில் நடைபெறவிருந்த யுவன்டஸ் ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.முதல் பாதி ஆட்டத்தில் ஜோசே கலாயோனும், டிரியஸ் மெர்டென்சும் நப்போலியின் இரண்டு கோல்களைப் போட்டனர்.

இரண்டாம் பாதியில் கேப்டன் மாரேக் ஹம்சிக், லொரேன்சோ இன்சைன், மரியோ ருய் போட்ட மூன்று கோல்களின் மூலம் நப்போலி தனது மிகப் பெரிய வெற்றியை உறுதிச் செய்தது. 28 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் சிரி ஆ லீக் பட்டத்தை வெல்ல நப்போலி இலக்குக் கொண்டுள்ளது.