பாரிஸ், பிப்.27-
பிரான்சின் பாரிஸ் செயின் ஜெர்மைன் அணியின் உச்ச நட்சத்திரம் நெய்மார், ரியல் மாட்ரிட்டுக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்றின் இரண்டாம் கட்ட ஆட்டத்தில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மார்செலுக்கு எதிரான லீக் ஆட்டத்தின்போது நெய்மார் காயம் அடைந்தார்.
இந்நிலையில் நெய்மாருக்கு ஏற்பட்ட காயம் குறித்து மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நெய்மாரின் வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டிருப்பதுடன் எலும்பு ஒன்று முறிந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நெய்மார், வெகு விரைவில் பாரிஸ் செயின் ஜெர்மனி அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என கூறப்படுகிறது.
மூன்று வாரங்களுக்கு முன்னர் நடந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கான ஆட்டத்தில் பாரிஸ் செயின் ஜெர்மைன் 1 – 3 என்ற கோல்களில் ரியல் மாட்ரிட்டிடம் தோல்வி கண்டது. இந்நிலையில் ரியல் மாட்ரிட்டுக்கு எதிராக நெய்மார் களமிறங்க மாட்டார் என்பது பாரிஸ் செயின் ஜெர்மைன் அணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

