கோலாலம்பூர், பிப்.28 –

பினாங்கு மாநிலத்தில் வெ.630 கோடி மதிப்பிலான மிகப்பெரிய கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பான புலன்விசாரணையை நிறுத்துவதற்கு வெ.1.9 கோடியை பெற்றதாக நம்பப்படும் டத்தோ  ஸ்ரீ ஜி. ஞானராஜாவின்  தடுப்பு காவல் மேலும் ஆறு நாட்களுக்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை அவரை கைது செய்த  எம்.ஏ.சி.சி. எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தடுப்பு காவலை நீட்டிப்பதற்காக இன்று காலை அவரை புத்ராஜெயா மஜிஸ்திரெட் நீதிமன்றத்து க்கு கொண்டு வந்தது.   37 வயதுடைய டத்தோ ஸ்ரீ ஜி. ஞானராஜா, காலை 9.10 மணி அளவில்  எம்.ஏ.சி.சி-யின் ஆரஞ்சு நிறத்திலான சிறை உடையில் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தார்.

விசாரணைக்கு உதவும் பொருட்டு மார்ச் 5 ஆம் தேதி வரை டத்தோ ஸ்ரீ ஜி. ஞானராஜா தடுப்பு காவலில் வைக்க , மஜிஸ்திரெட் நூர்ஹிடாய்த்தி முஹமட் நஸ்ரோ, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அனுமதி வழங்கினார்.

பினாங்கில் கடலடி சுரங்கப் பாதை திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த ஆண்டில் தனது விசாரணையை முடுக்கி விட்டது.

இந்த விசாரணையை நிறுத்துவதற்காக டத்தோ ஸ்ரீ ஜி. ஞானராஜா  அந்த சுரங்கப் பாதை திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனத்திடம் ஒரு கோடியே 90 லட்சம் ரிங்கிட் கையூட்டு பெற்றுள்ளார். கடந்த ஆண்டில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு கட்டங்களாக அவரிடம் பணம் வழங்கப்பட்டுள்ளது.