வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > நட்சத்திர விழாவில் அறிவித்த நிதி  கிடைக்கவில்லை; ஆர்.ஓ.எஸ். கூறும் வரையில் காசிம் பேரவை செயல்படும்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

நட்சத்திர விழாவில் அறிவித்த நிதி  கிடைக்கவில்லை; ஆர்.ஓ.எஸ். கூறும் வரையில் காசிம் பேரவை செயல்படும்!

கோலாலம்பூர், பிப். 28-
இந்நாட்டிலுள்ள திரைப்படத்துறையைச் சேர்ந்த அனைத்து கலைஞர்கள், அவர்கள் சார்ந்த இயக்கங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட மலேசிய இந்தியக் கலை இயக்கங்களின் பேரவை (காசிம்) தேசிய சங்கப் பதிவிலாகா அறிவிக்கும் வரையில் செயல்படும் என அதன் தலைவர் விஜய் எமர்ஜென்சி தெரிவித்தார்.
இந்த பேரவை குறித்து நேற்று ஆர்.ஓ.எஸ்சில் புகார் அளித்த சில இயக்கங்கள் அதிலிருந்து வெளியேறுவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தன. மேலும், அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில் இன்று விஜய் எமர்ஜென்சி தலைமையில் காசிம் பேரவையின் மற்றொரு தரப்பினர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர். அதில் பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த பேரவை முழுக்க முழுக்க உள்ளூரைச் சேர்ந்த அனைத்து இந்திய கலைஞர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டது. இந்த பேரவையை அமைப்பது குறித்து சிவா என்னிடம் வந்து பேசவில்லை. மாறாக, 2 கலைஞர்களின் மரணத்திற்கு பிறகு இந்த பேரவையை அமைக்கும் எண்ணம் எங்கள் இருவருக்கும் இருந்தது. அதன் பின்னர் நான்தான் எல்லா இயக்கங்களையும் சந்தித்து இதில் இணையுமாறு அழைப்பு விடுத்தேன்.
இயக்கங்களின் தலைவர்கள் மட்டுமே என கூறவில்லை!
இந்த பேரவை தொடங்கப்பட்ட போது இதில் இயக்கங்களின் தலைவர்கள், இதர பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் எல்லாம் உறுப்பினர்களாக சேரலாம் என கூறப்பட்டதே தவிர தலைவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்க வேண்டுமென கூறப்படவில்லை. அது இந்த பேரவையின் சட்டத்தில் இல்லை.
கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த பேரவை தொடங்கப்பட்ட போது இதுப்பற்றி சிவா தரப்பினருக்கு தெரியும். ஆனால், இப்போதுதான் அவர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர். ஒருவரைப் பிடிக்காததற்காக பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். ஒரு கலைஞர் தனது திறமையின் காரணமாக மற்றொரு இயக்கத்திலும் இருக்கிறார். அதை நாம் தடுக்க முடியுமா?
இயக்கங்களில் இணையும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது!
கலைஞர்கள், இதர திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் அந்தந்த இயக்கத்தில்தான் உறுப்பினர்களாக சேர வேண்டுமென யாரும் கட்டாயப் படுத்த முடியாது. அது ஏற்புடையதும் அல்ல. ஆனால், சிவா தரப்பினர் இந்த கோரிக்கையைத்தான் முன்வைக்கின்றனர். உதாரணத்திற்கு, ஒரு கலைஞர் இப்பொழுது இருக்கும் இயக்கத்தில் நல்ல சலுகைகளைப் பெற்றுவரும் நிலையில் அவர் வேறொரு இயக்கத்திற்கு சென்றால் அங்கு அவர்களுக்கு அந்த மாதிரியான சலுகைகள் கிடைக்கவில்லை என்றால் யார் பொறுப்பேற்பது? என விஜய் எமர்ஜெண்சி கேள்வியெழுப்பினார்.
கணக்கறிக்கைகள், உறுப்பினர் பட்டியல் வழங்கப்படவில்லை!
சிவா தரப்பில் இருக்கும் இயக்கங்களிடம் முறையான கணக்கறிக்கைகள், உறுப்பினர்கள் பட்டியல் ஏதும் இல்லை. நாங்கள் பல ஆண்டுகளாக எங்களின் இயக்கங்களின் வாயிலாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். பத்திரிக்கையாளர்களுக்கு தெரியும். ஆனால், அவர்கள் அதுப்போன்று ஏதாவது செய்திருக்கிறார்களா? அவர்களின் இயக்கங்களின் கணக்கறிக்கைகள் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில்தான் தயார்படுத்தியிருக்கிறார்கள். போதுமான உறுப்பினர்களைக் கொண்டிருக்காததால்தான் அவர்கள் உறுப்பினர்கள் பட்டியலை வழங்க மறுக்கின்றனர்.
டி.எச்.ஆர். ராகா அறிவிப்பாளர் கவிமாறன் பாகுபாடு ஏன்?
இப்போது குற்றச்சாட்டுகளைக் கூறும் டி.எச்.ஆர். ராகாவின் அறிவிப்பாளர் கவிமாறன் இன்று வரையில் காசிம் தலைவர் என்ற முறையில் என்னிடம் நேர்க்காணல் பற்றியோ காசிம் பேரவையை பற்றியோ அந்த வானொலியில் பேசவில்லை. அவருக்கு ஏன் இந்த பாகுபாடு? இந்த பேரவையின் தொடக்கத்தின் போது அரசியலில் உள்ளவர் இதன் தலைவராக வரக்கூடாது என அவர் கூறினார். அரசியலில் உள்ளவர் தலைவராக வந்தால் என்ன தவறு? இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகளை செய்ய முடியுமே!
நட்சத்திர விழாவில் அறிவித்த நிதிகள் வந்து சேரவில்லை!
நட்சத்திர விழாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்த 1 லட்சம் வெள்ளி, டத்தோ மாலிக் அறிவித்த 50 ஆயிரம் வெள்ளி ஆகியவை இன்னும் காசிம் பேரவைக்கு கிடைக்கவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கம் தணிக்கை அறிக்கை முடிந்த பிறகுதான் அந்நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அப்படி நிதி கிடைக்காவிட்டால் அதனை செய்தியாளர்களிடம் தெரிவிப்போம். டத்தோ மாலிக் அறிவித்த நிதி பற்றி ஒன்றும் தெரியவில்லை. மேலும், நட்சத்திர விழாவில் உள்ளூர் கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவமானப்படுத்தப்பட்டதாக கூறுவது உண்மையல்ல. அது அவர்களின் நிகழ்ச்சி. நாம் அதில் ஒரு சிறு அங்கமே. ஒருநாள் முழுவதும் நடத்தப்படும் இதுப்போன்ற நிகழ்ச்சிகளில் சில எதிர்பாராதது நடக்கத்தான் செய்யும்.
மூத்த கலைஞர்களை இழிவுபடுத்தாதீர்!
அந்த தரப்பினர்கள் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் உள்ளூரைச் சேர்ந்த மூத்த கலைஞர்களை இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நாட்டில் மூத்த கலைஞர்கள் ஆற்றிய சேவையை நாம் பாராட்ட வேண்டும்.. மட்டம் தட்டக்கூடாது. காசிம் பேரவையில் தேர்தல் அதிகாரிகளாக இருந்தவர்கள் வாக்களித்ததாக அவர்கள் கூறியுள்ளனர். அந்த தேர்தலின் போது தேர்தல் அதிகாரியாக இருந்த திவாகர் சுப்பையாவும்தான் வாக்களித்தார். அப்போது ஏன் அவர்கள் வாயைத் திறக்கவில்லை. அந்த தேர்தலில் அவர்கள் தோல்வி கண்டதால்தான் இதுப்போன்ற அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். நாங்கள் எல்லா தரப்புகளையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இறங்கி வந்தோம்.
கூட்டுறவு கழகத்தை அமைப்போம்!
இப்போது எதிர்திசையில் இருக்கும் அவர்களை மீண்டும் பேரவைக்குள் சேர்த்துக்கொள்வது குறித்து அதன் செயற்குழு முடிவு செய்யும். அதேபோல், நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளான கூட்டுறவு கழகத்தை அமைத்தே தீருவோம். அதற்கான சட்ட விதிமுறைகள் எங்களுக்கு தெரியும். காசிம் பேரவையின் செயற்குழுவினர் அதனை வழிநடத்துவார்கள் என விஜய் எமர்ஜென்சி குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன