தாய்மண் சேர்ந்ததும் தீ கொண்டு போனது

0
4

மும்பை, பிப் 28-

குழந்தை பருவம் தொடங்கி தனது மொழி சிந்தும் பேச்சால், பார்வையால், ஈர்ப்பான நடை உடை பாவனையால், மயில் போன்ற அழகால், குயில் போன்ற குரலால், வசிகர தோற்றத்தால், இன்னும் அபூர்வ நடிப்பால் இந்திய சினிமாவை தனது பெயருக்கு பின்னால் வட்டமடிக்க வைத்த இந்த மூன்றாம் பிறை கண்மூடி இன்று சத்தமில்லாமல் அக்னி தேவனுக்கு சாம்பலாகி கொண்டது. நேற்று வருமா இல்லை இன்று வருமா என்று எதிர்பார்த்திருந்த இந்த அழகு தாரகையின் தங்க உடலை காத்திருந்து தீ கொண்டு போனது.

துபாயில் தனது உறவினரின் திருமணத்திற்கு சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

திருமண நிகழ்ச்சி முடிந்து துபாயிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்தார். மாரடைப்பால் மரணம் அடைந்ததாக முதலில் செய்தி வெளியானது. ரஷீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாரடைப்பின் காரணமாக அவர் உயிரிழக்கவில்லை என்றும் குளியலரையில் தண்ணீர் தொட்டிக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்றும் நிரூபணமானது. அதோடு, அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்து இருப்பதாகவும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனிடையே, அவரது மரணம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டதால் அவரது உடலை மும்பைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் ஸ்ரீஇதேவியில் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்றிரவு 10 மணியளவில் மும்மையிலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அந்தேரியில் உள்ள செலிபிரட்டிஸ் ஸ்போர்ட்ஸ் இன்று நண்பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஸ்ரீதேவியில் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பிரமாண்ட வாகனத்தில் அவரது இறுதி ஊர்வலம் அந்தேரியிலிருந்து 7 கி.மீ. தூரம் கொண்ட வில்லே பார்லே பகுதியில் உள்ள இடுகாட்டுக்கு புறப்பட்டது.

உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டு மகாராஷ்டிர அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மலேசிய நேரப்படி இரவு 8.00 மணியளவில் மகாராஷ்டிர அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இதழ் மலர்ந்த ஒரு அழகிய செந்தூரப்பூ 54 வருடங்களுக்கு பிறகு இன்று அமைதியாய் கருகியது. இந்த இழப்பு அவர் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆர்பரிப்பு. இருந்தாலும், என்றுமே ஓயாது இந்த ஸ்ரீதேவியின் அழகிய இணைப்பும் நினைப்பும்.