துரின், மார்ச்.1 –

2017/18 ஆம் பருவத்துக்கான இத்தாலி கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு யுவன்டசும், ஏ.சி மிலானும் தகுதிப் பெற்றுள்ளன. தொடர்ந்து நான்காவது ஆண்டாக யுவன்டஸ், இறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற்றுள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் யுவன்டஸ் 1 – 0 என்ற கோல்களில் அட்லாந்தா அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் யுவன்டசின் ஒரே கோலை 75 ஆவது நிமிடத்தில் மிராலேம் பிஜானிக் போட்டார். கடந்த வாரம் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1- 0 என்ற வெற்றி பெற்றிருந்த யுவன்டஸ் 2 -0 என்ற கோல்களில் இறுதி ஆட்டத்துக்கு தேர்வுப் பெற்றது.

இதனிடையே ஒலிம்பிக்கோ அரங்கில் நடந்த ஆட்டத்தில் ஏ.சி.மிலான் 5- 4 என்ற பினால்டி கோல்களில் லாசியோவை வீழ்த்தியது. இரண்டாம் கட்ட அரையிறுதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் எந்த ஒரு கோலையும் போடவில்லை. இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க பினால்டி வழங்கப்பட்டது. இதில் ஏ.சி மிலான் 5 – 3 என்ற கோல்களில் வாகை சூடியது. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் ஏ.சி. மிலான் மீண்டும் இறுதி ஆட்டத்தில் கால் பதித்துள்ளது.