தைப்பிங், ஜூலை 27-

தைப்பிங் இந்து மயானத்தில் கட்டப்பட்ட நவீன மின்சுடலை பூர்த்தியாகி 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் செயல்படாமல் இருப்பது குறித்து வட்டார மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.  தங்களின் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் வட்டார மக்களில் சிலர் பல்வேறான பதாகைகளை ஏந்தியவாறு மயானத்தின் பராமரிப்பு நிர்வாகத்திற்கு எதிராக அமைதி மறியலில் ஈடுபட்டனர்.

2013ஆம் ஆண்டு பேரா மந்திரி புசாரின் சிறப்பு மானியத்தைக் கொண்டு, சுமார் 7 லட்சம் வெள்ளி செலவில் தைப்பிங் இந்து மயானத்தில் இந்த மின்சுடலையின் கட்டுமானம் தொடங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு நிறைவடைந்தது.

ஆனால் இதுநாள்வரையில் இந்த மின்சுடலை செயல்படாமல் இருப்பதால் வட்டார பொதுமக்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்தியர்களுக்காக நிறுவப்பட்ட இம்மின்சுடலை திறக்கப்படும் பட்சத்தில் சீனர்களின் மின்சுடலைகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் செலவினங்களையும் குறைக்க முடியுமென அவர்கள் தெரிவித்தார்கள்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் விரைவில் கூடும் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அமானா கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ நிஜார் வாயிலாக இது குறித்து கேள்வி எழுப்பப்படுமென அமானா கட்சியின் பேரா மாநில செயற்குழு உறுப்பினர் டத்தோ நல்லிராஜா தெரிவித்தார்.