கோலாலம்பூர், ஜூலை 27-

தடுப்பூசி போடாத குழந்தைகளை பாலர் பள்ளியில் சேர்ப்பதற்கு அனுமதிப்பதில்லை என்ற தடுப்பூசி கொள்கை ஒன்றை அரசு ஆராய்கின்றது என நேற்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.  இந்த கொள்கை ஒதுக்கி வைக்கப்படுவதாக அர்த்தம் அல்ல. குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்தை அது கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து கருத்துகளை பெற்ற பின்னரே இது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படுமென அவர் சொன்னார். தற்போது இந்த அணுகுமுறை ஆஸ்திரோலியாவின் முன்னெடுக்கப்படுகின்றது. பாலர் பள்ளியில் குழந்தைகளை பதிவு செய்வதற்கு முன்னர், குழந்தைகளுக்கு கட்டாயம் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டுமென்ற நடைமுறை ஆஸ்திரோலியாவிலிருந்து வருவதாக பெங்காலான் செப்பாக் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹிசானி உசேன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தப்போது டாக்டர் சுப்ரமணியம் இதனை தெரிவித்தார்.

தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோர்களுக்கு எதிராக சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க திட்டமிடுகிறதா என டாக்டர் ஹிசானி கேள்வி எழுப்பினார். கல்வி உதவி மற்றும் ஆலோசனை மூலமாக தடுப்பூசி விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலை இருப்பதாக டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு 1,663 பெற்றோர்கள் மறுத்தனர். 2015ஆம் ஆண்டு தடுப்பூசி போட மறுத்த பெற்றோர்களின் எண்ணிக்கை 1,541ஆகும். தங்களது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியத்தை பெற்றோர்களுக்கு வலியுறுத்தும் நடவடிக்கையில் அமைச்சு தொடர்ந்து ஈடுபட்டு வருமென டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார்.