மென்செஸ்டர், மார்ச். 5 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை வெல்லும் தனது இலக்கில் மென்செஸ்டர் சிட்டி தொடர்ந்து அதிரடி படைத்து வருகிறது. ஆக கடைசியாக ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 1 – 0 என்ற கோலில் நடப்பு வெற்றியாளரான செல்சியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் பிரீமியர் லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் லிவர்புலைக் காட்டிலும் மென்செஸ்டர் சிட்டி 18 புள்ளிகளில் முன்னணியில் உள்ளது. இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய 35 வினாடிகளில் பெர்னார்டோ சில்வா போட்ட கோல் மென்செஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதிச் செய்தது.

பிரீமியர் லீக் பட்டத்தை வெல்வதில் தமது கிளப் மேலும் ஒரு வெற்றியைப் பதிவு செய்திருப்பதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக மென்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் குவார்டியோலா தெரிவித்தார். இந்த பருவம் முழுவதும் தமது அணி வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்துக்கு பிரீமியர் லீக் கிண்ணம் சிறந்த பரிசாக இருக்கும் என குவார்டியோலா கூறினார்.

அதேவேளையில் பலம் வாய்ந்த மென்செஸ்டர் யுனைடெட், லிவர்புல், செல்சி., அர்செர்னல் போன்ற கிளப்புகளைப் பின்னுக்குத் தள்ளி மிகப் பெரிய புள்ளிகள் அடிப்படையில் லீக் கிண்ணத்தை வெல்வதும் தமக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் சொன்னார்.

இதனிடையே மென்செஸ்டர் சிட்டிக்கு எதிராக செல்சி வெளிப்படுத்திய தற்காப்பு பாணியிலான ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இரண்டு முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர்களான அல்வாரோ மொராத்தே, ஒலிவர் ஜீரோட் ஆகிய இருவரையும் முதன்மை அணியில் களமிறக்காத நிர்வாகி அந்தோனியோ கொந்தேவின் நடவடிக்கையை கால்பந்து விமர்சகர்கள் சாடியுள்ளனர்.