தண்டராம்பட்டு, ஜூலை 28-
திருவண்ணாமலை அடுத்த வாணாபுரம் காம்பட்டு பால் சொசைட்டி தெருவை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 75). விவசாயி. இவருக்கு ஏழுமலை (51), சக்திவேல் (45) என்று 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் திருமணமாகி தனித் தனியே வசித்து வருகிறார்கள்.
தங்கவேலுவும் தனியாக வசித்தார். தங்கவேலு தனக்கு சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலத்தையும் தலா 3 ஏக்கர் என பாகம் பிரித்து, 2 மகன்களுக்கும் கொடுத்தார். அதில் அவர்களும் விவசாயம் செய்து வந்தனர்.
இந்த நிலையில், இளைய மகன் சக்திவேலுக்கு மட்டும் தங்கவேலு பண உதவி உள்பட பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இதனால், மூத்த மகன் ஏழுமலை தந்தை மீது ஆத்திரமடைந்தார். பாரபட்சமாக நடந்து கொள்வதாக தந்தையிடம் அவர் தகராறு செய்தார். இது தொடர்பாக, தந்தைக்கும் மூத்த மகனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. முட்டல், மோதல் ஏற்பட்டு தகராறு முற்றியது.
தந்தை தங்கவேலுவை தீர்த்துக் கட்டினால் தான் ‘நிம்மதி’ என்ற முடிவுக்கு ஏழுமலை வந்தார். அதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். இன்று காலை அதற்கான நேரம் கிட்டியது.தந்தை தங்கவேலு இயற்கை உபாதை கழிக்க, இன்று காலை 5 மணிக்கு மறைவான இடத்திற்கு சென்றார். அப்போது, அரிவாளை எடுத்துக் கொண்டு தந்தையை பின் தொடர்ந்து ஏழுமலை சென்றார்.
பின்பக்கமாக மறைந்துச் சென்று தந்தை தங்கவேலுவை அரிவாளால் வெட்டினார். தலை, கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த தங்கவேலு, ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
தந்தையை கொன்ற பிறகு, பழி தீர்த்த வெறியில் ரத்தக்கறை படிந்த அரிவாளை சுழற்றி கொண்டே ஏழுமலை அங்கிருந்து சாவகாசமாக ஊருக்குள் நடந்துச் சென்றார்.
சம்பவத்தையறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து வாணாபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்ற ஏழுமலை, போலீசாரிடம் அரிவாளை ஒப்படைத்து சரணடைந்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கவேலுவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து ஏழுமலையை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தந்தையை வெட்டி கொன்ற ஏழுமலைக்கு சென்னம்மாள் என்ற மனைவி, செல்வமணி என்ற ஒரு மகள், செல்லதுரை மற்றும் விஜய ராஜ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
