கோலாலம்பூர், மார்ச் 10-
பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகள் நிறைய வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. ஆனால, அவர்கள் அள்க்கும் வாக்குறுதிகள் தேனில் கலப்பட்ட விஷம் போன்றது. அவர்களின் வாக்குறுதிகள் கேட்பதற்கு நன்றாக இருக்குமே தவிர அவர்களால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைக்கமுடியாது. தற்போது சிலாங்கூரில் ஏற்படும் தண்ணீர் நெருக்கடி பிரச்னை அதற்கு முன்னுதாரணம் என டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணி அரசாங்கம் பொது மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளது. கட்சி அளித்துள்ள வாக்குறுதிகள் யாவும் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பதற்கு தற்போது இருக்கும் மேம்பாட்டுத் திட்டங்களும் செயல் நடவடிக்கைகளும் அதற்கு சான்றாக உள்ளது என அவர் கூறினார்.

இன்று பாகோவில் தேசிய முன்னணியின் இளைஞர் மற்றும் மகளிர் தேர்தல் கேந்திரத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளை மட்டும் நம்பாதீர்கள். அவர்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள் என்பதை பாருங்கள். தற்போது சிலாங்கூரில் எந்த பிரச்னை தலைதூக்கி நிற்கின்றது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் என அவர் சுட்டிக் காட்டினார்.

தற்போது சிலாங்கூரில் தண்ணீர் நெருக்கடியாக இருப்பதால் அம்மாநிலத்தில் வசிக்கும் 20 லட்சம் மக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

தேசிய முன்னணி அரசாங்கம் மக்களின் நலன் கருதி பல திட்டங்களை மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக எம்.ஆர்.டி ரயில் சேவை திட்டம், பினாங்கு மற்றும் சிலாங்கூர் ஏற்படுத்தியிருக்கும் வீடமைப்பு திட்டங்களை விட குறைந்த விலை வீடுகளை கட்டித் தந்துள்ளது என அவர் தெரிவித்தார்.