புத்ராஜெயா, மார்ச் 10-
6.3 பில்லியன் மதிப்பிலான பினாங்கு கடலடி சுரங்க பாதை திட்டம் மீதான விசாரணையை மூடுவதற்காக 1 கோடியே 90 லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட டத்தோஸ்ரீ அந்தஸ்து கொண்ட தொழிலதிபர் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
ஒருவரின் உத்தரவாதத்தின் அடிப்படையில் 150,000 வெள்ளி ஜாமின் தொகையில் அவரை மாஜிஸ்திரேட் லீ ஹோங் ஷி விடுவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட 37 வயதுடைய அந்த டத்தோஸ்ரீ சுமார் 11 நாள் தடுப்பு காவலுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அரசு சார்பற்ற ஓர் இயக்கத்தின் தலைவரின் கணவனான இவர், பினாங்கு கடலடி சுரங்க பாதை திட்டம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டுவரும் விசாரணையை தம்மால் தீர்த்து வைக்க முடியும் என கூறி 1 கோடியே 90 லட்சம் வெள்ளி பணத்தை அத்திட்டத்தின் முதன்மை கட்டுமான நிறுவனத்திடமிருந்து பெற்றதாக நம்பப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பல கட்டங்களாக இத்தொகை அந்த தொழிலதிபருக்கு வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.