ஸ்பெயின் லா லீகா – ரியல் மாட்ரிட், பார்சிலோனா வெற்றி!

0
2

மாட்ரிட், மார்ச்.11 –

ஸ்பெயின் லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் தத்தம் ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. பார்சிலோனா 2- 0 என்ற கோல்களில் மலாகாவை வீழ்த்திய வேளையில், ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல்களில் எய்பாரை வீழ்த்தியது.மலாகாவுக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனாவின் முன்னணி நட்சத்திரம் லியோனெல் மெஸ்சி களமிறங்கவில்லை.

மெஸ்சிக்கு மூன்றாவது குழந்தை பிறந்திருப்பதால் அவர் இந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. 15 ஆவது நிமிடத்தில் பார்சிலோனாவின் முதல் கோலை லுவிஸ் சுவாரேஸ் போட்ட வேளையில் 28 ஆவது நிமிடத்தில் பிலிப்பே கோத்தின்ஹோ கோல் எண்ணிக்கையை இரண்டாக உயர்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா லீக் பட்டியலில் தனது முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

இதனிடையே எய்பாரில் நடந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 2- 1 என்ற கோல்களில் எய்பாரை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களைப் போட்டு அதிரடி படைத்தார். 34 ஆவது நிமிடத்தில் முதல் கோலைப் போட்ட ரொனால்டோ இரண்டாவது கோலை, 84 ஆவது நிமிடத்தில் போட்டார்.

ரியல் மாட்ரிட் அணியின் கடந்த 10 ஆட்டங்களில் ரொனால்டோ 17 கோல்களைப் போட்டு அதிரடிப் படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் ரியல் மாட்ரிட் 57 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.