கோலாலம்பூர், ஜூலை 28-

இனி மீண்டும் அம்னோவில் இணையமாட்டேன் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் விலகினாலும் கூட இனி நான் அம்னோவில் மீண்டும் இணையமாட்டேன் என அவர் கூறியிருக்கிறார். அம்னோ உறுப்பினர்கள் தங்களது சுயநலத்திற்குத்தான் முன்னுரிமை வழங்குவதாகவும் அக்கட்சி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

மக்களுக்காக அக்கட்சி இனியும் போராடவில்லை என்றும் அம்னோ மிகவும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகிவிட்டது எனவும் அவர் தெரிவித்தார். அம்னோ தலைவர்களில் பெரும்பாளோர் சுயநலத்திற்கும் பணத்திற்காகவும் முன்னுரிமை வழங்குகின்றனர். சமயம் இனம் மற்றும் மக்களுக்காக அவர்கள் போராட்டம் இனி இல்லை. இனிமே தான் இப்போதைய அம்னோ இதற்கு முன்பு இருந்த அம்னோவை போன்று இல்லாமல் இருக்கிறது என டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

எனவே மீண்டும் அம்னோவிற்கு திரும்பும் எண்ணம் எதுவும் கிடையாது என தமது முகநூலில் பதிவேற்றம் செய்த காணொலியில் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்திருக்கின்றார்.  தமக்குப் பிறகு நாட்டில் பிரதமர் பதவியை ஏற்ற துன் அப்துல்லா அகமட் படாவி மீது நம்பிக்கை இழந்தததை தொடர்ந்து 2008ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி இதற்கு முன் அம்னோவிலிருந்து டாக்டர் மகாதீர் விலகினார்.

நஜீப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்தாண்டு பிப்ரவரி 26ஆம் தேதி அவர் அம்னோவிலிருந்து விலகினார். நாட்டின் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மாட் நிர்வாகத்தை குறைகூறியதற்காக 1969ஆம் ஆண்டு அம்னோவிலிருந்து டாக்டர் மகாதீர் நீக்கப்பட்டார்.