புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஜூன் 8இல் அன்வார் வெளிவருவதற்கு வாய்ப்பில்லை! ஸாஹிட் ஹாமீடி
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஜூன் 8இல் அன்வார் வெளிவருவதற்கு வாய்ப்பில்லை! ஸாஹிட் ஹாமீடி

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 12-
எதிர்கட்சிகள் கூறி வருவது போல் பி.கே.ஆரின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஜூன் 8ஆம் தேதி விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பில்லை என உள்துறை அமைச்சரும் துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி தெரிவித்தார்.

சிறையின் ஒழுங்கு குற்றங்களை ஒரு கைதியான அவர் செய்வாரேயானால் தண்டனை, விடுதலைக்கான நாள் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம். 2000ஆம் ஆண்டு சிறைத்தண்டனை விதிமுறைகளின் கீழ் இந்த விதிமுறை உள்ளதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதில் வாயிலாக அவர் கூறினார்.

சிறைத் தண்டனையில் மூன்றி ஒரு பங்கு தண்டனைக் காலம் குறைக்கப்படுவதன் வாயிலாக அன்வார் ஜூன் 8ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என கூறப்படுவதை உறுதிப்படுத்துமாறு பி.கே.ஆர். அலோர் ஸ்டார் நாடாளுமன்ற உறுப்பினரான கூய் சியாவ் லியூங் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி இவ்வாறு சொன்னார்.

அன்வார் உள்பட கைதிகளின் தண்டனைக் காலம், தண்டனை குறைப்பு, விடுதலை நாள் ஆகியவற்றை 1995ஆம் ஆண்டு சிறை சட்டம் மற்றும் 2000ஆம் ஆண்டு சிறைத்தண்டனை விதிமுறைகள் ஆகியவற்றின் கீழ் சிறைத்துறை மேற்கொள்ளும். 1 மாதத்திற்கும் அதிகமாக சிறைத்தண்டனையை அனுபவிக்கும் கைதிகளுக்கு சிறைத்தண்டனையில் ஒரு பங்கு தண்டனைக் காலத்தை குறைப்பதற்கு அந்த சட்டங்கள் வகை செய்கின்றது.

கைதிகளின் விடுதலை நாள் வார இறுதி விடுமுறை அல்லது பொதுவிடுமுறை நாளில் வந்தால் கைதிகள் ஒரு நாளுக்கு முன்பதாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவ்வகையில், அன்வாரின் தண்டனைக் காலத்தை கணக்கிடும் போது அவரது விடுதலை நாள் ஜூன் 10 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால், அதற்கு ஒரு நாள் முன்பதாக சனிக்கிழமையும் விடுமுறை என்பதால் அன்வார் ஜூன் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட வேண்டுமென ஸாஹிட் ஹாமீடி குறிப்பிட்டார்.

விரைவில் நடைபெறவிருக்கும் 14ஆவது பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பி.கே.ஆர். கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்வாரின் விடுதலைக்கான 100 நாள் கணக்கிடப்படுவதை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

ஓரின புணர்ச்சி குற்றச்சாட்டு தொடர்பில் கூட்டரசு நீதிமன்றம் அன்வார் மீதான குற்றச்சாட்டை நிலை நிறுத்தியதைத் தொடர்ந்து அவர் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 5 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க தொடங்கினார். தன் மீதான குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டதாக அன்வார் இப்ராஹிம் இதுவரையில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன