கோலாலம்பூர், மார்ச்.14 – 

தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கை அறிக்கை ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பெரித்தா ஹரியான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிடப்படும் பட்சத்தில் நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி புக்கிட் ஜாலில் புத்ரா  அரங்கில் நடைபெறும் என கூறப்படுகிறது. 2013 ஆம் ஆண்டில் தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கை அறிக்கை, ஏப்ரல் 6 ஆம் தேதி இதே புத்ரா அரங்கில்தான்  வெளியிடப்பட்டது.

தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் மத்தியில் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட விருக்கிறார். தேசிய முன்னணியின் 13 உறுப்பு கட்சிகளின் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இதனிடையே ஏப்ரல் மாதம் தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிடப்படும் என்பதை அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் டான்ஸ்ரீ அனுவார் மூசாவும் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிடப்படும் தேதியைக் கூற அவர் மறுத்து விட்டார்.

கடந்த பொதுத் தேர்தலைக் காட்டிலும் இம்முறை தேசிய முன்னணி மிக சிறந்த தேர்தல் கொள்கை அறிக்கையை முன் நிறுத்தும் என அனுவார் மூசா தெரிவித்துள்ளார். 13 ஆவது பொதுத் தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் 97.6 விழுக்காடு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

” வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் ; நம்பிக்கையைக் காப்பாற்றுவோம் ” என்ற கருப்பொருளுடன் 13 ஆவது பொதுத் தேர்தலுக்கான  கொள்கை அறிக்கையில் தேசிய முன்னணி 17 வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.