கோலாலம்பூர், மார்ச்.14 – 

மக்களவை சபாநாயகர் பதவியில் இருந்து தம்மை விலகுமாறு வலியுறுத்திய மூன்று டி.ஏ.பி உறுப்பினர்கள் தம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என டான் ஸ்ரீ பண்டிக்கார் அமீன் மூலியா தெரிவித்துள்ளார். மன்னிப்பு கேட்கத் தவறு பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பண்டிக்கார் மூலியா எச்சரித்துள்ளார்.

1 எம்.டி.பி தொடர்பான கேள்விகள், வர்த்தகர் ஜோ லோவின் உல்லாச கப்பல் இந்தோனேசியாவில் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் தாங்கள் கொண்டு வந்த அவசர தீர்மானத்தையும்  நிராகரித்த காரணத்துக்காக பண்டிக்கார் அமீன் மூலியா தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என அந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தி இருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார், புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே கூ ஹம், தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங் ஆகிய மூவருக்கும் பண்டிக்கார் அமீன் மூலியா கடிதம் அனுப்பியுள்ளார். மன்னிப்பு கேட்கத் தவறும் பட்சத்தில் அம்மூவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பண்டிக்கார் தெரிவித்துள்ளார்.

அந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகளில் தாம் வருத்தம் அடைந்துள்ளதாக பண்டிக்கார் தெரிவித்தார். அதேவேளையில் மக்களவை சபாநாயகர் என்ற முறையில் கூட்டத் தொடரில் ஒரு கேள்விக்கோ அல்லது தீர்மானத்துக்கோ அனுமதி வழங்குவது தமது முழு அதிகாரத்துக்கு உட்பட்டதாகும். எனவே அந்த அதிகாரத்தை அவர்கள் கேள்வி எழுப்ப முடியாது என பண்டிக்கார் கூறினார்.

நாடாளுமன்ற நிலைக்குழு அந்த அதிகாரத்தை தமக்கு வழங்கியுள்ளதாக பண்டிக்கார் குறிப்பிட்டார்.  கருத்து, வாதம், முரண் அல்லது தாக்குதல் வெளிப்பாடு கொண்ட கேள்விகளை நிராகரிக்கும் உரிமை தமக்கு உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.