ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > இந்தியா/ ஈழம் > வன்முறையைத் தூண்டினேனா? என்னை சிறையில் அடைக்க பாஜக சதித் திட்டமிட்டம்..
இந்தியா/ ஈழம்

வன்முறையைத் தூண்டினேனா? என்னை சிறையில் அடைக்க பாஜக சதித் திட்டமிட்டம்..

சேலம்: வன்முறைத் தூண்டியதாகக் கூறி 4 பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்டுத் தீட்டிய சதி என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சேலம் அஸ்தம்பட்டி மணக்காட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசினார் என்ற புகார் எழுந்தது. இதையடுத்து சீமான் மீது வன்முறையை தூண்டியதாகக் கூறி 4 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு குறித்து சீமான் கூறியதாவது: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த மீனவர்களின் பிரச்சனையை கடந்த 5 ஆண்டுகளாக நான் பேசி வருகிறேன். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ‘நெய்தல் படை’ அமைத்து, மீனவர்களைப் பாதுகாப்போம் என்று கூறி வருகிறேன்.

இந்த நெய்தல் படையில் மீனவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும், அவர்களின் கையில் துப்பாக்கியைக் கொடுப்போம் என்று பல கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் என் மீது பாயாத வழக்கு இப்போது பாய்ந்துள்ளது. நான் மத்திய அரசை விமர்சித்துத் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறேன். அதனால் தான் மத்தியில் ஆளும் பாஜக அரசு என்னைக் குறித்து சதித் திட்டம் தீட்டி வருகிறது. என்னைக் கைது செய்யவும் தூண்டி வருகிறது. என்னை எப்படியாவது சிறையில் அடைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என்று சீமான் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன